போட்ஸ்வானா நாட்டில் பிசிஏ கலாஹாரி மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கபோரோனில் உள்ள போட்ஸ்வானா கிரிக்கெட் சங்கத்தின் ஓவல் 2 மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லெசோதோ – பிரேசில் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பிரேசில் 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மோனிகே மச்சாடோ 69, ரோபர்டா ஏவரி 48 ரன்கள் விளாசினர். 203 ரன்கள் இலக்குடன் பேட் செய்த லெசோதா அணி 6.2 ஓவர்களில் 13 ரன்களுக்கு சுருண்டது. இதனால் பிரேசில் அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணி தரப்பில் வேகப்பந்து வீச்சு வீராங்கனையான லாரா கார்டோசோ 3 ஓவர்களை வீசி 4 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்களை வீழ்ததி சாதனை படைத்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் மகளிர், ஆடவர் ஆகிய இரு பிரிவிலும் ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் நபர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் லாரா கார்டோசோ.
இதற்கு முன்னர் ஆடவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு மியான்மர் அணிக்கு எதிராக பூடான் அணியின் சோனம் யேஸ்ஹே 7 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்களை கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. அதேவேளையில் மகளிர் டி 20 கிரிக்கெட்டில் கடந்த 2024-ம் ஆண்டு மங்கோலியா அணிக்கு எதிராக இந்தோனேஷியாவின் ரோமாலியா ரோமாலியா ரன்கள் ஏதும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்கள் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.
இந்த இரு சாதனைகளையும் தற்போது தகர்த்து புதிய சாதனையை படைத்துள்ளார் லாரா கார்டோசோ. லெசோதா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-வது ஓவரை வீசிய லாரா கார்டோசோ ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 4-வது ஓவரை வீசிய அவர், மேற்கொண்டு 4 விக்கெட்களை சாய்த்தார். இதைத் தொடர்ந்து 6-வது வீசிய லாரா கார்டோசோ இந்த ஓவரில் 2 விக்கெட்களை வீழ்த்தினார். கடைசி விக்கெட்டை மரியேன் ஆர்தர் கைப்பற்றினார்.














