ராஜஸ்தானில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் ஹெலிகாப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு 6 பேருக்கு பொருத்தப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஜலவார் மாவட்டம் மன்புரா பிபாஜி நகரைச் சேர்ந்தவர் விஷ்ணு பிரசாத். 33 வயதான இவர் கடந்த 10-ம் தேதி உள்ளூரில் ஏற்பட்ட சண்டையில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது மூளை செயலிழந்துவிட்டதாக 12-ம் தேதி மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து, ஜலவார் மாவட்ட ஆட்சியர் அஜய் சிங் ரத்தோர் மற்றும் மூத்த மருத்துவர்கள் முன்னிலையில், விஷ்ணு பிரசாத் தந்தை மற்றும் மனைவியுடன் உடல் உறுப்பு தானம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட குடும்பத்தினர், பிரசாத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவருடைய உடல் உறுப்புகள் ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூருக்கு ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. விமான நிலையத்திலிருந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு உடல் உறுப்புகளை, போக்குவரத்து நெரிசல் இல்லாமல் விரைவாக எடுத்துச் செல்வதற்காக விரிவான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து சவாய் மான் சிங் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் மகேஸ்வரி கூறும்போது, “மூளைச்சாவு அடைந்த பிரசாத்தின் ஒரு சிறுநீரகம், 2 நுறையீறல்கள் மற்றும் இதயம் ஜெய்ப்பூரில் உள்ள நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது” என்றார். இதன் மூலம் விஷ்ணு பிரசாத் 6 பேருக்கு உயிர் கொடுத்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.














