எஸ்ஐஆர் விவகாரத்தில் தேவையற்ற வேலையைச் செய்யும் பாஜக, பதற்றமாகவே வைத்திருக்க நினைப்பதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
இது குறித்து நேற்று திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் என்பது கோவையில் நடந்த இது ஒரு நிகழ்வல்ல. பல நிகழ்வுகள் வெளியே தெரியாமல் உள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 6 வயது குழந்தையை வன்புணர்வு செய்து எரித்துக் கொலை செய்துவிட்டு சிறையிலிருந்து வந்தவன் பெற்ற தாயை கொலை செய்கிறான். அவனை நீதிமன்றம் தண்டனையை நீக்கி விடுவிக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது இச்சமூகம் வாழ வாய்ப்பற்று கொடூரமாகிவிட்டதோ எனத் தோன்றுகிறது.
கோவையில் சம்பவம் நடைபெற்ற பகுதியில் நீண்ட நாட்களாக அதிகமாக மது விற்பனை நடைபெற்று உள்ளது. காவல்துறை சுட்டுப் பிடித்தோம் என்கிறார்கள். இதற்கு நாம் அனைவரும் தலைகுனிய வேண்டும். ஒரு பாதுகாப்பற்ற சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்ற நடுக்கம் ஏற்படுகிறது. கடும் சட்டங்கள் இருந்தால் தான் இது போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியும். பொள்ளாச்சியில், அண்ணா பல்கலையில் என இதுபோன்று பாலியல் வன்புணர்வுகள் தொடர்ச்சியாக நடக்கிறது.
அதிமுக குறித்து நான் சொன்னது விமர்சனமல்ல உண்மையைச் சொன்னேன். அதிமுக-வினர் பேசுவதையெல்லாம் ஒரு பொது மனிதனாகப் பாருங்கள். துரோகம், சமூக நீதி, சுயமரியாதை குறித்தெல்லாம் பேச இவர்களில் யாருக்காவது தகுதி இருக்கிறதா? நான்தான் திராவிடத்தின் உண்மையான வாரிசு என்று சொல்லும் போது வெறி வருமா வராதா? அதனால்தான் பேசினேன்.
ஆரியத்தை எதிர்க்க வந்தது திராவிடம் என்கிறார்கள். தமிழர் என்று வைத்தால் பிராமணர்கள் ‘நானும் தமிழன்’ என்று உள்ளே வந்து விடுவார்கள் என்று பெரியார் தொட்டு, வீரமணி வரை பேசி வருகின்றனர். அதே கருத்தை தான் அதிமுக-வினர் பேசுகிறார்கள். திராவிடம் என்று இருக்கும்போது ஜெயலலிதாவின் தலைமையை திராவிடத் தலைவர்கள் எப்படி ஏற்றார்கள்?
ஆரியத்தின் முன்பு திராவிடம் மண்டியிட்டது. மண்டியிட்டால் கூட பரவாயில்லை குப்புறவிழுந்து கும்பிட்டது. இதில் சுயமரியாதை பற்றி பேசுகிறீர்கள். இதுதான் தன்மானமா… தமிழினத்தின் தலை நிமிர்வா… சுயமரியாதை இதுதானா? காளிமுத்து, திருநாவுக்கரசர் ஆகிய இருவரைத் தாண்டி யாரேனும் ஒருவர் ஜெயலலிதா முன்பாக நிமிர்ந்து நின்று பேசி இருக்கிறார்களா? திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் சுயமரியாதை பற்றி பேச தகுதி இல்லை.
எஸ்ஐஆர் விவகாரத்தில் பாஜக தேவையற்ற வேலையைச் செய்கிறது. மக்களை பதற்றமாகவே வைத்திருக்கப் பார்க்கிறார்கள். அப்போதுதான் செய்கிற தவறு வெளியே தெரியாமல் இருக்கும். ஆவணங்கள் கொடுக்கவில்லை என்றால் பெயர்களை நீக்குவோம் என தேர்தல் ஆணையம் இப்போது தெரிவிக்கிறது.
இரண்டு மாதத்தில் தேர்தலை வைத்துக் கொண்டு என்ன ஆவணங்களை கொடுக்க முடியும்? பிஹார் போன்ற வட மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கு வாக்குரிமை வழங்க இந்த வேலையைச் செய்கிறார்கள். அப்படி வழங்கும் போது தமிழ்நாடு மற்றுமொரு பிஹாராக மாறிவிடும்… என்றார்.













