தமிழகத்தில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு இல்லை. சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மூலம் வெற்றி பெற பாஜக முயற்சிக்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மெட்ராஸ் ரவுண்ட் டேபிள் 1 சார்பில் சென்னை ரன்ஸ் மாரத்தான் போட்டிகள் நேற்று நடைபெற்றது. நேப்பியர் பாலத்தில் இருந்து தொடங்கிய மாரத்தானை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: கரூர் சம்பவத்துக்கு அனைவரும் தான் பொறுப்பு என்று நடிகர் அஜித் பேசியிருப்பது அவரது சொந்த கருத்து. கரூர்விவகாரத்தில் முதல்வர் தெளிவாக பதில்சொல்லியிருக்கிறார். அனைத்து கட்சிகளின் தலைவர்களும் கூட பேசியிருக்கின்றனர். ஆனால் உண்மையாக யார் பதில் சொல்ல வேண்டுமோ அவர் (விஜய்) பேட்டி கொடுக்க விரும்பவில்லையா என தெரியவில்லை. இச்சம்பவத்துக்கு அனைவரும்தான் பொறுப்பு. ஆனால் சம்பவத்துக்கு யார் முக்கிய காரணமோ அந்த நபரையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவரிடமும் பேட்டி எடுக்க வேண்டும்.
கடந்த 4 மாதங்களாகவே மழைக்கால பிரச்சினைகள் குறித்து சமூக வலைதளங்கள், ஊடகங்களில் இருந்து வரும் புகார்களுக்கு தீர்வு காண மக்கள் பிரதிநிதிகளை கொண்டு தொடர்ச்சியாக ஆலோசனைகளை கூட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகளவில் மேற்கொண்டு இருக்கிறோம். சாலை பராமரிப்பு பணிகளும் ஆங்காங்கே வேகமாக நடைபெற்று வருகின்றன. மக்கள் எங்களிடம் இன்னும் அதிகமாக எதிர்ப்பார்க்கிறார்கள். எங்கு சென்றாலும் பிரச்சினைகளை சுட்டிகாட்டுகின்றனர். அவற்றை எவ்வளவு சீக்கிரம் தீர்க்க முடியுமோ அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
எங்கெல்லாம் தேர்தல் நடக்கிறதோ, அங்கு பாஜக தனக்கு சாதகமான வாக்குகளை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு பாதகமான வாக்குகளை எல்லாம் நீக்குகின்ற பணிகளில் வெளிப்படையாக ஈடுபட்டு வருகிறது. பிஹாரில் சிறப்பு திருத்தம் மூலம் என்னென்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். பல ஆண்டுகளாக தமிழகத்தில் வெல்வதற்கு பாஜகவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மக்களும் அந்த வாய்ப்பை தருவதும் இல்லை. எனவே சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முறையை பயன்படுத்தியாவது வெற்றிபெற வேண்டும் என முயற்சிக்கின்றனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுக கட்சியில் நீக்கியிருப்பது பற்றி என்னால் கருத்து சொல்ல முடியாது. ஆனால் பழனிசாமி தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அப்போதுதான் திமுக எளிதாக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.














