தமிழகத்தை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்பதற்காக அதிமுக துணையுடன், தற்போது புதிய கட்சிகளை பாஜக தேடிக் கொண்டிருக்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார்.
கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாது: மத்திய பாஜக அரசு திமுகவை வீழ்த்த பல்வேறு திட்டங்களை தீட்டுகிறது. அதையெல்லாம் தாண்டி சிறந்த ஆட்சியை முதல்வர் வழங்குகிறார்.
தமிழகத்தை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என கூட்டணியில் உள்ள பழைய கட்சியானஅதிமுகவின் துணையுடன், தற்போது புதிய கட்சிகளை பாஜக தேடிக் கொண்டிருக்கிறது. எத்தனை கட்சிகள் வந்தாலும் திமுக வெற்றி பெறுவதை தடுக்க முடியாது.
பூத் கமிட்டியினர் தான் திமுகவின் ‘ஸ்டெதாஸ் கோப்’ போன்றவர்கள். நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள அனைத்து மக்களுடனும் தொடர்பில் இருக்க வேண்டும். தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.