பாஜக கவுன்சிலர் சுகதன் சிறையிலேயே பதவியேற்கலாம் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த டிசம்பரில் கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் திருவனந்தபுரம் மாநராட்சியை பாஜக கைப்பற்றியது. புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பின்போது பாஜகவை சேர்ந்த 20 கவுன்சிலர்கள், உள்ளூர் தெய்வங்களின் பெயரில் உறுதிமொழி ஏற்றனர். இது சட்டப்படி செல்லாது, 20 கவுன்சிலர்களும் புதிதாக பதவியேற்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி 19 கவுன்சிலர்கள் சட்டப்பூர்வமாக பதவியேற்றுக் கொண்டனர். ஆனால் 35-வது வார்டு பாஜக கவுன்சிலர் சுகதன் மட்டும் பதவியேற்கவில்லை. உள்ளூர் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். கேரள சமூக விரோத தடுப்பு சட்டத்தின் (கேஏஏபிஏ) கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த மாத இறுதியில் திருவனந்தபுரம் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது பாஜக கவுன்சிலர் சுகதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் வலியுறுத்தின. இதையடுத்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மிகப்பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது.
கேரள நகராட்சி சட்டத்தின்படி தொடர்ந்து 3 கூட்டங்களில் பங்கேற்காத கவுன்சிலர் தகுதி நீக்கம் செய்யப்படலாம். இதன்படி சுகதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே திருவனந்தபுர மாநகராட்சி கவுன்சிலராக பதவியேற்க சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று சுகதன் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி குன்னி கிருஷ்ணன் விசாரித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குன்னி கிருஷ்ணன் நேற்று பிறப்பித்த உத்தரவில், “பொது மக்கள் வாக்களித்து சுகதனை தேர்வு செய்துள்ளனர். மக்களின் தீர்ப்பை நிராகரிக்க முடியாது. திருச்சூரில் உள்ள வையூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகதன், சிறையிலேயே கவுன்சிலராக பதவியேற்கலாம். ஜூலை 14-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு சிறையில் பதவியேற்பு விழாவை நடத்த சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் செய்தியாளர்கள் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
