“பாஜகவால் அதிமுகவை எதுவும் செய்துவிட முடியாது!” – வலுவான நம்பிக்கையில் வைகைச்செல்வன் | நேர்காணல்

0
16

Follow Us

“2026-ல் பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம்” என அதிமுக பொதுக்குழு – செயற்குழு ஆர்ப்பாட்டமாக சூளுரைத்திருக்கும் நிலையில், அக்கட்சியின் செய்தித் தொடர்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வனிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காகப் பேசினோம்.

Q

பாஜக-வைத் தவிர எந்தக் கட்சியும் உங்கள் பக்கம் இன்னும் திரும்பியதாகத் தெரியவில்லையே?

A

பொறுத்திருந்து பாருங்கள்… இரண்டு மூன்று கட்சிகள் பேசிக் கொண்டிருக்கின்றன. ஜனவரியில் எங்கள் கூட்டணி இறுதிவடிவம் எடுக்கும்.

Q

இதற்கு முன் எந்தத் தேர்தலிலாவது அதிமுக-வுக்கு இப்படியான அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா?

A

எம்ஜிஆர் காலம் வேறு… அம்மா காலம் வேறு. இருந்த போதும் இப்போது நாங்கள் ஒன்றும் பின் தங்கிவிடவில்லை. கட்சியினர் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட அனுபவம் இந்தத் தேர்தலில் நிச்சயமாக எங்களுக்கு ஏற்படாது. 210 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

Q

ஜெயலலிதா காலத்தில் இருந்த அதே கம்பீரத்துடன் அதிமுக இப்போதும் இருப்பதாகச் சொல்லமுடியுமா?

A

ஒவ்வொரு காலகட்டம் என்பது வேறு. அண்ணாவைப் போல் கருணாநிதி இல்லை. கருணாநிதியைப் போல் ஸ்டாலின் இல்லை. ஸ்டாலினைப் போல் உதயநிதி இல்லை. இதுதான் நிதர்சனம். காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப தலைவர்கள் வருகிறார்கள்; போகிறார்கள். அந்த விதத்தில் கம்பீரத்தின் அடையாளம் அம்மா. எம்ஜிஆர் அரவணைப்புடன் கூடிய கம்பீரத்துடன் இருந்தார். அதே கம்பீரம் காலத்துக்கேற்ப இப்போதும் தொடர்கிறது.

Q

ஆனால், ஜெயலலிதா காலத்தில் டெல்லி தலைவர்கள் அல்லவா போயஸ் கார்டனுக்கு வந்து காத்திருந்தார்கள்?

A

அம்மா காலத்தில் டெல்லி தலைவர்கள் இங்கு வந்தது உண்மைதான். ஆனால் இன்றைய சூழலில், டெல்லி தலைவர்கள் வலுத்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி 7 ஆண்டுகளாகத்தான் அறியப்படுகிற தலைவராக இருக்கிறார். அதற்கு முன்பு அவர் அமைச்சர் மட்டும் தான். எனவே, அன்றைய சூழல் வேறு; இன்றைய சூழல் வேறு. இருப்பினும் டெல்லி தலைவர்களும் இங்கு வந்து பேசும் காலம் விரைவில் வரும்.

Q

போகிறவர்கள் எல்லாம் போகட்டும் என்று நினைப்பது ஒரு தலைவரின் சரியான அணுகுமுறையா?

A

அப்படியான அணுகுமுறை கூடாது தான். ஆனால், கட்சிக்கு எதிராகச் செயல்பட்டால் பிறகு என்ன தான் செய்வது?

Q

செங்கோட்டையன் அப்படி தவறாக என்ன செய்துவிட்டார் என நினைக்கிறீர்கள்?

A

தொடர்ந்து கட்சி குறித்தும், தலைமை குறித்தும் கட்சியினர் மத்தியில் விமர்சனம் செய்துகொண்டே இருந்தார். பிறகு அதை ஊடகங்கள் மூலமாக பொதுவெளியிலும் பேசினார். கட்சித் தலைமைக்கே கெடு வைத்தால் அதன் பிறகு பொதுச்செயலாளரின் அதிகாரம் கேள்விக்குறியாகிவிடாதா? அதனால் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Q

சசிகலாதரப்பு கட்சிக்குள் வந்தால் மீண்டும் சர்வாதிகாரம் தலைதூக்கும் என்று அஞ்சுகிறீர்களோ..?

A

நிச்சயமாக அப்படித்தான் நடக்கும். ஏற்கெனவே அப்படித்தானே அவர்கள் இருந்தார்கள். சக்திமிக்க தலைவராக இருந்த அம்மாவையே தெரிந்தோ தெரியாமலோ ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள் தானே. மீண்டும் அவர்கள் உள்ளே வந்தால் பழைய நிலை வந்து விடும் என தொண்டர்களே அஞ்சுகிறார்கள்.

Q

மற்ற மாநிலங்களில் நடந்ததை எல்லாம் பார்த்த பிறகும் அதிமுக-வுக்கு பாஜக கடைசிவரை நல்லது செய்யும் என்று நம்புகிறீர்களா?

A

கூட்டணி ஆட்சி என்று அவர்கள் சொன்னதை நாங்கள் ஏற்கவில்லை. தங்கள் தலைமையில் தான் கூட்டணி என்றார்கள். ஆனால், தமிழகத்துக்கு நாங்கள் தான் கூட்டணிக்கு தலைமை என்று சொல்லிவிட்டோம். எனவே, மற்ற இடங்களைப் போல் பாஜக-வால் அதிமுக-வை எதுவும் செய்துவிட முடியாது. ஏனென்றால் அதிமுக பலம்பொருந்திய இயக்கம்; அதை யாரும் வீழ்த்திவிட முடியாது.

Q

விஜய் உங்கள் கூட்டணிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு இன்னும் இருக்கிறது போலிருக்கிறதே..?

A

அப்படியல்ல… பொது எதிரியான திமுக-வை வீழ்த்த பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரலாம் என எதிர்பார்க்கிறோம். காலம் இன்னும் இருப்பதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

Q

இத்தனை காலம் சும்மா இருந்துவிட்டு இப்போது திமுக அமைச்சர்கள் மீது ஊழல் சேற்றை வாரி இறைப்பது தேர்தலுக்காகத்தானே..?

A

தொடர்ச்சியாக திமுக அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்கள் சொல்லப்பட்டுத்தான் வருகிறது. அப்படி இருந்தும் அமைச்சர்கள் பாடம் படிக்காததால் இப்போது அதிகமான புகார்கள் வர ஆரம்பித்திருக்கின்றன.

Q

ஓபிஎஸ்ஸையும் தினகரனையும் கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என பாஜக கட்டாயப்படுத்துவது ஏன்?

A

ஓட்டு சிதறக்கூடாது என்பதற்காகத்தான். அவர்களை கட்சிக்குள் சேர்க்கச் சொல்லிஅழுத்தம் கொடுக்கவில்லை. கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்ளலாம் என பாஜக நம்புகிறது.

Q

எப்படி இருந்த கட்சி இப்படி ஆகிவிட்டதே என்று எப்போதாவது வருத்தப்பட்டிருக்கிறீர்களா?

A

அம்மா காலத்தில் அவரைச் சந்திக்க வேண்டுமானால் காத்திருக்க வேண்டும். அவர்கள் கடைக்கண் பட்ட யாருக்கும் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆனால், பழனிசாமியை யாரும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்; தங்களது கோரிக்கைகளைச் சொல்லலாம். வாய்ப்பு இருந்தால் அதை அவர் செய்துகொடுப்பார். இப்படியான நிகழ்வுகளை எல்லாம் நினைத்துப் பார்த்திருக்கிறேன்.

Q

சிறப்பான ஆட்சியைக் கொடுத்திருந்தால் 2021-ல் மக்கள் ஏன் அதிமுக-வை வீட்டுக்கு அனுப்பினார்கள் என்கிறாரே அமைச்சர் ரகுபதி?

A

வெறும் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக எங்களை வென்றது. தற்போதைய எஸ்ஐஆரில் தொகுதிக்கு சுமார் 30 ஆயிரம் போலி வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இப்படியான வாக்குகளை வைத்துத்தான் திமுக ஆட்சிக்கு வந்ததே தவிர நியாயமான, உண்மையான தேர்தல் மூலம் ஆட்சிக்கு வரவில்லை. சென்னை மாநகராட்சி தேர்தலில் 100 வார்டுகளில் மறுதேர்தல் நடத்தச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்ட வரலாறை ரகுபதி புரட்டிப் பார்க்கட்டும். அதை விட்டுவிட்டு எங்கு வளர்ந்தாரோ அந்த இயக்கத்தை உரசிப் பார்க்க வேண்டாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here