பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது

0
33

பாஜக வேட்பாளர் பட்டியலை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று வெளியிடுகிறார்.

அதிமுக-வுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக, 27 தொகுதிகளில் களம் காண்கிறது. அதிமுக ஒதுக்கிய 27 தொகுதிகளில் சிலவற்றை பாஜக மாற்றிக் கோருவது, ஒரே தொகுதிக்கு பல முனைப் போட்டி நிலவுவது மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையைத் தேர்தலில் போட்டியிட வைக்க மேலிடம் அழுத்தம் கொடுப்பது போன்ற காரணங்களால் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இது தொடர்பாக கடந்த 31-ம் தேதி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக மையக்குழு உறுப்பினர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியல், டெல்லி மேலிடத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. தற்போது டெல்லி மேலிடம் அதற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இன்று (3-ம் தேதி) காலை கமலாலயத்தில் பியூஷ் கோயல் வேட்பாளர் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், கமலாலயத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “வேட்பாளர் பட்டியல் தாமதமாவதால் எந்தப் பாதிப்பும் இல்லை. பியூஷ் கோயல் வந்ததும் பட்டியல் வெளியாகும். தமிழகத்தில் போதைப் புழக்கம் தலைவிரித்தாடுகிறது. முன்பு பள்ளிவாசல்கள் அருகே மிட்டாய் விற்றார்கள். ஆனால் இப்போது, கஞ்சா, மெத்தம்பெட்டமைன் போன்ற போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.

திமுக-வின் தேர்தல் அறிக்கை ஒரு ஜீரோ. கடந்த முறை கொடுத்த வாக்குறுதிகளையே அவர்கள் நிறைவேற்றவில்லை. தங்களது தேர்தல் அறிக்கையை ஹீரோ, ஹீரோயின் என்று அவர்கள் பெருமை பேசுகிறார்கள். ஆனால் உண்மையில், அது ஜீரோ மற்றும் ஹெராயின் என்று தான் சொல்ல வேண்டும். வெற்றுப்பாடல்களைப் பாடி மக்களை ஏமாற்றும் வேலை இனி தமிழகத்தில் எடுபடாது. திமுக ஆட்சியில் சாமானிய மனிதனுக்கே பாதுகாப்பு இல்லாதபோது, நடிகர் விஜய்யின் பாதுகாப்பு குறித்துக் கேட்பதில் அர்த்தமில்லை” என்றார்.

இதனிடையே, புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று இரவு சென்னை வருகிறார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கும் அவர், நாளை காலை பாஜக உயர்மட்டக் குழுவினருடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அப்போது, பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here