பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இடம்பெற்றுள்ள ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மாஞ்சி கூறுகையில், “என்டிஏ கூட்டணியில் எங்களுக்கு 15 இடங்கள் ஒதுக்கப்படாவிட்டால் நாங்கள் இத்தேர்தலில் போட்டியிட மாட்டோம். என்றாலும் என்டிஏ கூட்டணியை நாங்கள் ஆதரிப்போம்” என்று தெரிவித்தார்.
பிஹார் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை பாஜக-ஐக்கிய ஜனதா தளம் இன்னும் அறிவிக்கவில்லை. என்றாலும் மொத்த முள்ள 243 இடங்களில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் தலா 100 இடங்களிலும் சிராக் பாஸ்வான் கட்சி 24, ஜிதன் ராம் மாஞ்சி கட்சி 10, உபேந்திர குஷ்வாகா கட்சி 6 இடங்களிலும் போட்டியிடும் என என்டிஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.