அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2019-ம் ஆண்டு அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு கோரி போராடிய போது, அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ஆதரவு அளித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசாணை 354-ன் படி உரிய ஊதியம் வழங்கப்படும் என்று மருத்துவர்களிடம் அவர் சத்தியம் செய்தார். ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு அந்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு முகம், ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு முகம் என திமுக இரட்டை வேடம் போடுகிறது. அன்று அவர் விடுத்த அறிக்கைகளையே இன்று அவருக்குத் திருப்பி அனுப்பும் போராட்டத்தை மருத்துவர்கள் தொடங்கியுள்ளனர்.
இது முதல்வருக்கு நேர்ந்த தலைகுனிவு. கரோனா பேரிடர் காலத்தில் உயிரிழந்த 11 அரசு மருத்துவர் குடும்பங்களுக்கு மத்திய அரசு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கியது. ஆனால், திமுக அரசு, 10 காசு கூட வழங்கவில்லை. உயிரிழந்த டாக்டர் விவேகானந்தன் மனைவி அரசு வேலை கேட்டுப் போராடியும் செவிசாய்க்கவில்லை.
சுகாதாரத் துறையில் முன்மாதிரி மாநிலம் எனும் தமிழகத்தில் தான், அரசு மருத்துவர்களுக்கு நாட்டிலேயே குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே, இப்போதாவது முதல்வர் தனது பழைய அறிக்கைகளை நினைத்துப் பார்த்து, வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

