மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் முதல் கூட்டுறவு அடிப்படையிலான வாகன அழைப்புச் சேவையான ‘பாரத் டாக்ஸி’-யை நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “பாரத் டாக்ஸி சேவை முதற்கட்டமாக டெல்லி மற்றும் குஜராத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
அடுத்த 2 ஆண்டுகளுக்குள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும். குறிப்பாக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், துவாரகா முதல் காமாக்யா வரையிலும் நாடு முழுவதும் ‘பாரத் டாக்ஸி’ விரிவுபடுத்தப்படும். பாரத் டாக்ஸியுடன் இணைந்துள்ள ஓட்டுநர்களுடன் லாபம் பகிர்ந்து கொள்ளப்படும்” என்றார்.
நாட்டின் வாகன அழைப்புச் சேவைச் சந்தையில் தற்போது உபெர், ஓலா மற்றும் ராபிடோ போன்ற ஒரு சில நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவற்றுக்கு மாற்றாக மத்திய அரசே பாரத் டாக்ஸி சேவையை தொடங்கி உள்ளது. இந்த தளத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் கார்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
2002-ம் ஆண்டின் பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, ஜூன் 6, 2025 அன்று நிறுவப்பட்ட பாரத் டாக்ஸி, ‘பூஜ்ஜிய கமிஷன்’ மற்றும் ‘சர்ஜ் கட்டணம் இல்லாத’ (தேவை அடிப்படையில் அதிக கட்டணம்) விலை மாதிரியில் இயங்குகிறது.
எட்டு முன்னணி கூட்டுறவு அமைப்புகளின் ஆதரவுடன், டிசம்பர் 2-ம் தேதி டெல்லி மற்றும் குஜராத்தில் சோதனை அடிப்படையில் பாரத் டாக்ஸி சேவை தொடங்கப்பட்டது. பாரத் டாக்ஸி உலகின் முதல் மற்றும் மிகப்பெரிய கூட்டுறவு அடிப்படையிலான வாகன அழைப்புத் தளமாகவும், உலகின் மிகப்பெரிய ஓட்டுநர்களுக்குச் சொந்தமான நகர்வுத் தளமாகவும் உருவெடுத்துள்ளதாக கூட்டுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சோதனை முறையில் தொடங்கப்பட்டதிலிருந்து, 3 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுநர்கள் இத்தளத்தில் இணைந்துள்ளனர். 1 லட்சத்துக்கும் அதிகமான பயனர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் டெல்லி மற்றும் குஜராத்தில் நாளொன்றுக்கு 10,000-க்கும் மேற்பட்ட பயணங்கள் நிறைவு செய்யப்படுகின்றன.
இத்தளம் ஓட்டுநர்களை ‘சாரதிகள்’ என்று அழைப்பதோடு, அவர்களுக்கு சுகாதார காப்பீடு, விபத்து காப்பீடு, ஓய்வூதிய சேமிப்பு மற்றும் பிரத்யேக ஆதரவு அமைப்பு மூலம் சமூக பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறது. இதற்கான ஆதரவு மையங்கள் டெல்லியில் ஏழு இடங்களில் இயங்கி வருகின்றன.



