வளர்ந்த பாரதத்தை உருவாக்க நாட்டின் அனைத்து துறைகளிலும் சிறந்த தலைமை தேவை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி குஜராத் தலைநகர் காந்தி நகரில் 22 ஏக்கர் பரப்பளவில், தலைமைப் பண்பு பள்ளி (சோல்) கட்டப்பட்டு வருகிறது. இந்த கல்வி நிறுவனத்துக்கு குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கடந்த 14-ம் தேதி அடிக்கல் நாட்டினார். ரூ.150 கோடி செலவில் கட்டப்படும் தலைமைப் பண்பு பள்ளி அடுத்த 2 ஆண்டுகளில் செயல்படத் தொடங்கும் என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது.
இந்த சூழலில் தலைமைப் பண்பு பள்ளி சார்பில் நடைபெறும் 2 நாள் சிறப்பு மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் அரசியல், வணிகம், விளையாட்டு, ஊடகம், ஆன்மிகம், சமுக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் நாள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
‘வலிமையான, வீரியமான, நம்பத்தகுந்த, துணிச்சலான இளைஞர்கள்தான் இன்றைய தேவை. அப்படிப்பட்ட 100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள். உலகை மாற்றிக் காட்டுகிறேன்” என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். திறமையான 100 இளைஞர்கள் மூலம் பாரதத்துக்கு விடுதலை பெற்றுத் தர முடியும். உலகின் சக்திவாய்ந்த நாடாக பாரதத்தை உருவாக்க முடியும் என்று விவேகானந்தர் உறுதியாக நம்பினார். இன்றைய சூழலில் அப்படிப்பட்ட தலைமை பண்பு மிக்க இளைஞர்கள் பாரதத்துக்கு தேவை.
நடப்பு 21-ம் நூற்றாண்டில் வளர்ந்த பாரதத்தை உருவாக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இந்த லட்சியத்தை எட்ட ஒவ்வொரு இந்தியரும் இரவு, பகலாக உழைத்து வருகின்றனர். நமது நாட்டில் 140 கோடி மக்கள் உள்ளனர். அவர்களை வழிநடத்த அனைத்து துறைகளிலும் சிறந்த தலைமை தேவை. நமது இளைஞர்கள் உலகத் தரத்துக்கு இணையான தலைமை பண்பை பெற வேண்டும். ஒவ்வொரு துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதை கருத்தில் கொண்டு சிறந்த தலைவர்களை உருவாக்க குஜராத்தில் தலைமை பண்பு பள்ளி உருவாக்கப்படுகிறது.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இயற்கை வளங்கள் மட்டுமன்றி, மனித வளமும் அவசியம். குறிப்பாக புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் இளைஞர்களுக்கு திறன்சார் பயிற்சி அளிக்க வேண்டும். உலக நாடுகளோடு போட்டியிட இந்திய இளைஞர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். காலம், சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டும். இக்கட்டான சூழல்களில் தெளிவான முடிவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். உலக சந்தை நிலவரத்தை ஏற்ப பாரதத்தின் வணிகத்தை கட்டமைக்க வேண்டும். நமது சிந்தனைகள் சர்வதேச அளவில் இருக்க வேண்டும். அதேநேரம் உள்நாட்டு மக்களின் உணர்வுகளையும் புரிந்து வைத்திருக்க வேண்டும்.
எம்பி, எம்எல்ஏக்கள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், தொழில் முனைவோர் சர்வதேச தரத்துக்கு ஏற்ப மிகச் சிறந்த கொள்கைகளை வரையறுக்க வேண்டும். அந்த கொள்கைகளை வெற்றிகரமாக அமல்படுத்த வேண்டும். குஜராத் அரசு ஊழியர்களின் தலைமை பண்பை வளர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. புதிய கல்வி கொள்கையை திறம்பட அமல்படுத்த மாநில கல்வித் துறை செயலாளர்கள், மாநில திட்ட இயக்குநர்களுக்கான கருத்தரங்குகள் நடத்தப்பட்டு உள்ளன.
தற்போது உலகின் அதிகார மையமாக பாரதம் உருவெடுத்து வருகிறது. இந்த நேரத்தில் சர்வதேச தரம் வாய்ந்த புதிய நிறுவனங்களை நமது நாட்டில் உருவாக்க வேண்டும். குறிப்பாக தொழில்நுட்பம், விண்வெளி, உயிரி தொழில்நுட்பம், எரிசக்தி போன்ற துறைகள் தொடர்பான புதிய நிறுவனங்களை உருவாக்க வேண்டும். அந்த நிறுவனங்களை வழிநடத்த சிறந்த தலைமைகளை உருவாக்க வேண்டும்.
நாட்டின் சுதந்திர போராட்டத்தின்போது மிகச் சிறந்த தலைவர்கள் உருவானார்கள். அதேபோல வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க தற்போது சிறந்த தலைவர்கள் தேவைப்படுகின்றனர். சுதந்திர போராட்ட உணர்வை புதுப்பித்து, புதிய உத்வேகம் பெற வேண்டும். வெறும் வார்த்தைகளை மந்திரங்களாக மாற்றலாம். மூலிகைகளை மருந்தாக மாற்றலாம். ஒவ்வொரு நபரிடமும் ஏதாவது ஒரு தனித்திறமை ஒளிந்திருக்கும். அந்த திறமையை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும். வெற்றி, தோல்விகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.














