உத்தர பிரதேசத்தை சேர்ந்த அதுல் சுபாஷ் (34) பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றினார். கடந்த திங்கள்கிழமை அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, அவர் 24 பக்க கடிதம் எழுதி வைத்ததுடன் 90 நிமிடங்கள் அவர் பேசும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். தனது மரண விவகாரத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்டோரை எக்ஸ் தளத்தில் டேக் செய்து, சர்வதேச அளவில் விவாதிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
அதுல் சுபாஷ் எழுதிய கடிதத்தில், ‘‘எனக்கும் என் மனைவி நிகிதா சிங்காரியாவுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அடுத்த சில தினங்களில் எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. அடுத்த சில மாதங்களில் என் மாமனார் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். ஆனால் நான் வரதட்சணை கேட்டதால்தான் அவர் மாரடைப்பால் இறந்தார் என மனைவியின் வீட்டார் போலீஸில் புகார் அளித்தனர்.
லஞ்சம் கேட்ட நீதிபதி: என் மனைவி தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதித்த போதும் என்னிடம் ஜீவனாம்சமாக ரூ.3.3 கோடி கேட்டார். என் 3 வயது மகனை பராமரிக்க மாதம் ரூ.4 லட்சம் கேட்டார். ஆனால் என் மகனை பார்க்கவே அனுமதிக்கவில்லை. இந்த விவகாரத்து வழக்கு உத்தர பிரதேசத்தில் உள்ள ஜான்பூர் நீதிமன்றத்தில் நடந்தபோது அதனை விசாரித்த குடும்பநல நீதிமன்ற நீதிபதி ரீட்டா கவுசிக், பராமரிப்பு தொகையை குறைப்பதற்கு ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டார்.
நம் நாட்டிலுள்ள சட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கு ஆதரவாக இருக்கின்றன. ஆண்களை வஞ்சிப்பதாக உள்ளன. என் வழக்கில் எனக்கு நீதி கிடைத்தால் மட்டுமே என்னுடைய அஸ்தியை கங்கையில் கரைக்க வேண்டும். இல்லாவிடில் நீதிமன்ற வாசலில் ஓடும் சாக்கடையிலேயே கொட்டி விடுங்கள். என் மனைவியின் துன்புறுத்தலால் என் வயதான பெற்றோர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கருணைக் கொலை செய்ய கோரினால், அதை அனுமதிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
சுபாஷின் இந்த கடிதமும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவி நிகிதாவை பணி நீக்கம் செய்ய வேண்டும் என ஏராளமானோர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.














