பாலியல் வழக்கில் பாஜக எம்எல்ஏவுக்கு உடந்தையாக இருந்த பெங்களூரு போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

0
250

பெங்களூருவை சேர்ந்த பாஜக எம்எல்ஏ முனிரத்னா நாயுடு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு உடந்தை யாக இருந்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவில் உள்ள ராஜராஜேஷ்வரி நகர் பாஜக எம்எல்ஏவும் திரைப்பட தயாரிப் பாளருமான முனிரத்னா நாயுடு மீது 42 வயதான பெண் சமூக ஆர்வலர் பாலியல் புகார் தெரிவித்தார்.

முனிரத்னா நாயுடுவும் அவரது நண்பர்கள் கிரண் குமார், விஜய்குமார் உள்ளிட்ட 7 பேர் த‌ன்னை தனியார் விடுதிக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக முறையிட்டார். இந்த புகாரின்பேரில் ராமநகரா போலீஸார் கடந்த செப்டம்பர் 18-ம் தேதி முனிரத்னா நாயுடு உள்ளிட்ட 7 பேர் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து 7 பேரும் கைது செய்யப்பட்டு பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே இவ்வழக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு இணை ஆணையர் பி.கே.சிங் தலைமையிலான தனிப் படைக்கு மாற்றப்பட்டது.

பி.கே.சிங் இவ்வழக்கை கடந்த 2 மாதங்களாக பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தார். நேற்று ஹெப்பகுடி காவல் நிலையத்தின் ஆய்வாளர் அய்யன்னா ரெட்டியை (45) இவ்வழக்கில் கைது செய்தார். சிவாஜிநகர் பவுரிங் மருத்துவமனையில் மருத்துவ சோதனைகளை செய்த பின்னர், அவரை பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். விசாரணை அதிகாரியின் கோரிக்கையை ஏற்று, அய்யன்னா ரெட்டியை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

காப்பாற்ற முயற்சி: இந்த கைது குறித்து தனிப்படை போலீஸாரிடம் விசாரித்த போது, ‘‘பாஜக எம்எல்ஏ முனிரத்னா நாயுடுவுக்கு காவல் ஆய்வாளர் அய்யன்னா ரெட்டி மிகவும் நெருக்கமானவர். அந்த நட்பின் அடிப்படையில் இந்த பாலியல் வழக்கில் அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய முயன்றுள்ளார். அவருக்கு எதிராக நிறைய ஆதாரங்கள் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டார்”என தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here