இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (14ம் தேதி) தொடங்குகிறது.
இந்நிலையில் எஸ்ஏ 20 கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தத் தொடரின் கமிஷனரும், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனுமான கிரேம் ஸ்மித் பங்கேற்றார். அப்போது அவர், கூறியதாவது: துணைக் கண்ட ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதற்கு முன்னரே வேகப்பந்து வீச்சுக்கு எதிராக விக்கெட்களை இழக்க யாரும் விரும்ப மாட்டார்கள். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி சுழற்பந்து வீச்சை கையாள்வதற்கான உத்திகளை வகுக்கும் முயற்சியில் ஈடுபடும் என்று நான் நம்புகிறேன்.
மேலும் பேட்டிங்கை வலுவாக தொடங்க வேண்டும். டாப் 3 வீரர்கள் சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும். தொடக்கத்தில் 2 அல்லது 3 விக்கெட்களை இழந்துவிட்டால் அதைவிட மோசமான விஷயம் வேறு ஏதும் இருக்காது. இது நிகழ்ந்தால் அதன் பின்னர் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் போது நாம் போராட வேண்டும். தொடக்கத்தில் ஜஸ்பிரீத் பும்ராவை எதிர்கொள்வது பெரிய விஷயமாக இருக்கும். இதேபோன்று இந்திய அணிக்கு எதிராக காகிசோ ரபாடா இருப்பார். இவர்கள் இருவருமே உலகத்தரம் வாய்ந்த டெஸ்ட் சாதனைகளை கொண்டுள்ள பந்து வீச்சாளர்கள். துணைக் கண்ட ஆடுகளங்கள் ரபாடாவுக்கு பெரிய சவாலாக இருக்கும்.
தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சு தாக்குதலுக்கு அவர், நிச்சயம் தலைமை வகிப்பார். அவர், புதிய பந்தில் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுப்பது தெம்பா பவுமா தலைமையிலான அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். தென் ஆப்பிரிக்க அணியில் உள்ள பல வீரர்கள் இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஆட்டங்களிலும், பாகிஸ்தான் டெஸ்ட் தொடரிலும் விளையாடி உள்ளார்கள். ஆடுகளத்தின் சூழ்நிலையை தகவமைத்துக் கொண்டு விளையாட வேண்டும். இங்கு விளையாடுவதற்கு அந்த சிந்தனை முக்கியம். முதல் போட்டி நடைபெறும் கொல்கத்தா ஆடுகளம் பொதுவாக ரன் குவிக்க சிறந்த இடம்.
இதனால் ரன்களுக்கான மதிப்பை பெற முடியும். தென் ஆப்பிரிக்க அணி சிறந்த பந்துவீச்சு தாக்குதலுடன் இந்தியா வந்துள்ளது. முக்கியமாக சுழற் பந்துவீச்சில் கேசவ் மஹாராஜ், சைமன் ஹார்மர் ஆகியோர் நிச்சயம் சேதத்தை ஏற்படுத்த முடியும். அவர்களால் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியும், மேலும் விக்கெட்களை கைப்பற்றக்கூடிய அளவுக்கு அவர்கள் பந்தை சுழற்ற முடியும். மேலும் ரபாடா ரிவர்ஸ் ஸ்விங்கை எவ்வாறு கையாளுகிறார் என்பதையும் பார்க்க வேண்டும்” இவ்வாறு கிரேம் ஸ்மித் கூறினார்.














