அருமனை அருகே பத்துகாணி ஆதிவாசி குடியிருப்பு வனப்பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் தற்போது யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
கடந்த ஒரு வாரமாக வனப்பகுதியில் இருந்து யானை கூட்டம் கிராமப் பகுதிகளுக்குள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் நேற்று யானை கூட்டம் பத்துகாணி – ஆறுகாணி சாலையில் உலாவந்து, அவை அந்தப் பகுதியில் உள்ள விளைப்பொருட்களையும் உலத்தி என்ற மரங்களை வேருடன் சாய்த்து இலைகளையும் பட்டைகளையும் தின்றுவிட்டு சென்றுள்ளன. பெரிய யானைகளுடன் சிறிய குட்டி யானைகளும் வந்துள்ளது.
இது சம்பந்தமாக பொதுமக்கள் களியல் கிராம அலுவலர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். கிராம அலுவலர் மாணிக்கவேல் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் வனத்துறையினர் ஆங்காங்கே கண்காணித்து வருகின்றனர். யானைகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் வந்து செல்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.