கடந்த 40 ஆண்டுகளாக வங்க தேச விசா நீட்டிப்பில் பிஹாரில் வசித்த சுமித்ரா பிரசாத், குடியுரிமை திருத்த சட்டத்தின்(சிஏஏ) கீழ் இந்திய குடியுரிமை பெற்றுள்ளார்.
பிஹாரின் கதிகார் மாவட்டத்தில் பிறந்தவர் சுமித்ரா (40). இவர் கடந்த 1970-ம் ஆண்டு தனது 5-வது வயதில் கிழக்கு பாகிஸ்தானில் (வங்கதேசம்) உள்ள தனது அத்தை வீட்டுக்கு சென்றார். பின்பு அங்கேயே தங்கி வளர்ந்தார். பள்ளி படிப்பையும் அங்கு முடித்தார். கிழக்கு பாகிஸ்தான் கடந்த 1971-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி சுதந்திரம் பெற்று வங்கதேசமாக உருவானது.
சுமித்ரா கடந்த 1985-ம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைய, வங்கதேச விசா மூலம் இந்தியா திரும்பினார். சொந்த ஊர் வந்ததும் பரேமேஸ்வர் பிரசாத் என்பவரை திருமணம் செய்து ஆரா பகுதியில் வசித்தார். இவர் தனது வங்கதேச விசாவை புதுப்பித்துக் கொண்டே வந்தார். இவருக்கு பிரியங்கா, பிரியதர்ஷினி மற்றும் ஐஸ்வர்யா என்ற 3 மகள்கள் பிறந்தனர். கடந்த 2010-ம் ஆண்டு இவரது கணவர் இறந்தார். இதனால் தனது கணவரின் பலசரக்கு கடையை இவர் நடத்தி வந்தார்.
கடந்தாண்டு இவர் விசாவை புதுப்பிக்க தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆரா காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட சுமித்ராவை வங்கதேசம் செல்லம்படி போலீஸார் கூறினர். விசாவை புதுப்பிக்க கொல்கத்தா சென்றபோது, அங்கு குடியுரிமை திருத்த சட்டம்(சிஏஏ) மூலம் சுமித்ரா இந்திய குடியுரிமை பெறலாம் என தெரிவித்தனர். இதையடுத்து சுமித்ராவின் இளைய மகள் ஐஸ்வர்யா, தனது தாய்க்கு சிஏஏ சட்டம் மூலம் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்தார். தற்போது சுமித்ராவுக்கு இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது. சிஏஏ மூலம் பிஹாரில் முதல் குடியுரிமை பெற்ற பெண் சுமித்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சுமித்ரா கூறுகையில், ‘‘ எனக்கு சிஏஏ மூலம் இந்திய குடியுரிமை வழங்கிய பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கும் நன்றி. விசாவை புதுப்பிக்க நான் தூதரகத்துக்கும், காவல் நிலையத்துக்கு பல ஆண்டுகளாக அலைந்து திரிந்தேன். பலர் நான் மீண்டும் வங்கதேசம் செல்ல வேண்டும், இல்லையென்றால் சிறைக்கு அனுப்பிவிடுவர் என மிரட்டினர். தற்போது இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
ஐஸ்வர்யா கூறுகையில், ‘‘ எனது தாய்க்கு இத்தனை ஆண்டுகளாக எந்த அரசு உதவியும் கிடைக்கவில்லை. தற்போது இந்திய குடியுரிமை கிடைத்துள்ளதால், ஆதார், ரேஷன் அடடை, சமையல் கேஸ் இணைப்பு என அனைத்து வசதிகளுக்கும் எனது தாய்க்கு கிடைக்கும்’’ என்றார்.














