சென்னை: சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க டெண்டருக்கு விண்ணப்பித்த சென்னை பட்டாசு முகவர்கள் நலச் சங்கத்தின் டெண்டர் விண்ணப்பத்தை நிராகரித்த தமிழக அரசு, தகுதியில்லாத சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் டெண்டர் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டுமென கோரியும் சென்னை பட்டாசு முகவர்கள் நலச் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஆனந்த், எந்தவொரு வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தமிழக அரசே பட்டாசு கடைகளை அமைக்காமல், எதற்காக மூன்றாவது நபர்களுக்கு டெண்டர் விட்டு பட்டாசு விற்பனை மேற்கொள்ளப்படுகிறது என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசு தரப்பில், ஒவ்வொரு ஆண்டும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதையேற்க மறுத்த நீதிபதி, தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடைமுறைகளுக்கு இடைக்காலத் தடைவிதித்து, விசாரணையை தள்ளிவைத்தனர்.














