அதிமுக உள்கட்சி விவகாரம் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு, பொதுச் செயலாளர் பதவி உள்ளிட்ட உள்கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள உரிமையியல் வழக்குகளில் இறுதி முடிவு காணப்படும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த டிச.4-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘‘சூர்யமூர்த்தியின் மனு மீது தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும். அப்போது ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள அனைவரது கருத்துகளையும் கேட்டு முடிவுக்கு வர வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தது.
இதேபோல இரட்டை இலை சின்னம் தொடர்பாக வா.புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவை பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுகளின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முன்னாள் முதல்வர்களான ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி மற்றும் உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்த சூர்யமூர்த்தி, வா.புகழேந்தி, கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன், எம்.ஜி. ராமச்சந்திரன் உள்ளிட்டோர் எழுத்துப்பூர்வமாகவும், டிச.23-ம் தேதி நேரில் ஆஜராகியும் விளக்கமளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் நோட்டீஸ் பிறப்பித்திருந்தது.
அதன்படி பழனிசாமி தரப்பில் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகமும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர் பி.ராஜலட்சுமியும் மற்றும் வா.புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோரும் தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி தங்களது பதிலை மனுக்களாக அளித்தனர்.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவி உள்ளிட்ட அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.பி.க்கள் ஓ.பி.ரவீந்திரநாத், கே.சி.பழனிசாமி, வா.புகழேந்தி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் அளி்த்துள்ள மனு மீது எந்த விசாரணையும் மேற்கொள்ளக்கூடாது என தடை கோரி எதிர்க்கட்சித் தலைவரான பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்ததோடு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருப்பதாகவும், எனவே தடையை நீக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.
அதேபோல, தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி ஓ.பி.ரவீந்திரநாத், வா.புகழேந்தி, கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன், எம்.ஜி.ராமச்சந்திரன். பி.காந்தி ஆகியோர் தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த பிப்.7-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பி.ரவீந்திரநாத் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜெயந்த் பூஷன், வழக்கறிஞர் பி. ராஜலட்சுமி ஆகியோரும், வா.புகழேந்தி தரப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தியும் ஆஜராகி அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருப்பதாக வாதிட்டனர்.
பதிலுக்கு பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி. ஆர்யமாசுந்தரம், விஜய் நாராயண் ஆகியோர் அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட அதிமுக உள்கட்சி விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், தற்போது வழக்கு தொடர்ந்திருப்பவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் எனவும், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் இரட்டை இலை சின்னத்தை முடக்கினால் அது கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் எனவும் வாதிட்டிருந்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தீர்ப்பை தள்ளிவைத்திருந்தனர்.
இந்நிலையில் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘அதிமுக பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட அதிமுக உள்கட்சி விவகாரம் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. இதுதொடர்பாக தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு விதிகளின்படி தேர்தல் ஆணையம் சட்டத்துக்குட்பட்டு விசாரணை மேற்கொள்ளலாம். அதேநேரம் இந்த மனுக்களை விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து முழுதிருப்தியடைந்த பிறகே விசாரணையை தொடங்க வேண்டும்” எனக் கூறி இதுதொடர்பாக பழனிசாமி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.














