பெர்த் ஆடுகளத்தில் பந்துகள் எகிறும்: வடிவமைப்பாளர் மெக்டொனால்டு தகவல்

0
273

இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட்ஆட்டங்கள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்திய அணி எந்தவித பயிற்சி ஆட்டங்களிலும் பங்கேற்காமல் நேரடியாக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் ஆப்டஸ் மைதானத்தின் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளதாக மேற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் தலைமை ஆடுகள வடிவமைப்பாளர் ஐசக் மெக்டொனால்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “வேகம், பவுன்ஸ் தொடர்ச்சியாக இருக்கும் வகையில் பெர்த் ஆடுகளத்தை அமைத்துள்ளோம்” என்றார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டிக்கு தயார் செய்யப்பட்ட ஆடுகளத்தை போன்றே இம்முறையும் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்ஸில் 89 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இந்த போட்டியின் போது மார்னஷ் லபுஷேன் உள்ளிட்ட சில ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் எகிறி வந்த பந்துகளால் காயம் அடைந்தனர். அதேவேளையில் வேகப்பந்து வீச்சாளர்களான பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் கூட்டாக 12 விக்கெட்களை கைப்பற்றியிருந்தனர்.

ஐசக் மெக்டொனால்டு கூறும்போது, “கடந்த ஆண்டு ஆடுகளத்தில் 10 மில்லி மீட்டர் உயரத்துக்கு புற்கள் இருந்தன. இதனால் தொடக்க நாட்களில் ஆடுகளம் நன்றாக இருந்தது. புற்கள் இருப்பது ஆடுகளத்தின் வேகத்தை அதிகரிக்கச் செய்யும். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளின் பந்து வீச்சு குழுவும் மிகவும் வேகமாக இருந்தன. இம்முறையும் (இந்தியாவுக்கு எதிராக) அதே போன்று இருக்கும் என நம்புகிறோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here