அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக பாலமுருகன் தேர்வு

0
19

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 22 காளைகளை அடக்கி சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட வலையங்குளம் பாலமுருகனுக்கு கார் பரிசும், சிறந்த காளைக்கான டிராக்டர் பரிசை அவனியாபுரம் விருமாண்டி மந்தை முத்துக்கருப்பன் காளைக்கும் அமைச்சர் பி. மூர்த்தி வழங்கினார்.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது முதல் இறுதி சுற்று வரை விறுவிறுப்பாக நடந்தது. 940 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 47 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. மாடுபிடி வீரர்கள் 30 பேர் மற்றும் பார்வையாளர்கள், மாட்டு உரிமையாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இப்போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் பரிசுக்கான இறுதிச்சுற்று விறுவிறுப்பாக நடந்தது. இதில் சிறந்த மாடுபிடி வீரர்களாக முதலிடம் பெற்ற வளையங்குளம் பாலமுருகன் 22 காளைகளை அடக்கினார். அவருக்கு முதல் பரிசாக ரூ.8 லட்சம் மதிப்புள்ள நிஸான் கார் வழங்கப்பட்டது.

2-வது இடம் பெற்ற அவனியாபுரம் கார்திக் 17 காளைகளை பிடித்தார்.அவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. இவர் கடந்த முறை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடு பிடி வீரராக இரண்டாவது இடம் பரிசு பெற்றவர்.

சிறந்த காளையாக அவனியாபுரம் விருமாண்டி மந்தை முத்து கருப்பன்காளை முதல் பரிசு வென்றது. இக்காளை 60 வினாடிகள் மைதானத்தில் நின்று விளையாடியது. இந்த காளையின் உரிமையாளருக்கு ரூ.9 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் பரிசு வழங்கப்பட்டது.ஜி ஆர் கார்த்திக் என்பவரின் காளை 2-வது பரிசு பெற்றது. இந்த காளை 25 வினாடிகள் விளையாடியது.

சிறந்த வீரர், காளை உரிமையாளர் ஆகியோருக்கு அமைச்சர் மூர்த்தி பரிசுகளை வழங்கினார். ஆட்சியர் பிரவீன் குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன்,மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here