கத்திக்குத்தில் காயமடைந்த கிண்டி மருத்துவர் பாலாஜி வீடு திரும்பினார்

0
293

கிண்டி கலைஞர் மருத்துவமனையில் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 13-ம் தேதி விக்னேஷ் என்ற இளைஞர், புற்றுநோய் மருத்துவ நிபுணர் மருத்துவர் பாலாஜியை கழுத்து, தலை, நெற்றி என 7 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜி, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவரைக் கத்தியால் குத்திய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

இதையடுத்து, அந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மருத்துவருக்கு பல்துறை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், மருத்துவர் பாலாஜி நேற்று வீடு திரும்பினார்.

இதுதொடர்பாக மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி கூறும்போது, ‘‘மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளார். 6 வாரம் வரை விடுப்பு கேட்டுள்ளார். அதன்பின், மீண்டும் பணிக்கு திரும்புவார்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here