அயோத்தியில் 6 ஆண்டுகளாகியும் பாபர் மசூதி கட்டுமானப் பணி தொடங்கப்படவில்லை. வடிவமைமைப்பு முடிவாகாதது, நிதி வசூலில் சுணக்கம் ஆகியவை இதற்கு காரணமாக உள்ளன.
உத்தரபிரதேசம், அயோத்தி ராமர் கோயில் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் டிசம்பர் 6, 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பிறகு உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு நவ. 19, 2019-ல் வெளியானது.
இதில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. பாபர் மசூதி கட்ட மாற்று இடம் வழங்க உத்தரவிடப்பட்டது. இதன்படி மசூதிக்காக அயோத்தியில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள தனிபூர் கிராமத்தில் உ.பி. அரசு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியது.
மசூதி கட்டும் பொறுப்பு, உ.பி. மாநில சன்னி முஸ்லிம் மத்திய வக்பு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் சார்பில் நீதிமன்ற தீர்ப்பின்படி சில மாதங்களுக்குள் இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இதன் பிறகு 6 ஆண்டுகளாகியும் மசூதிக்கான கட்டுமானப் பணி தொடங்கப்படவில்லை.
வரைபடம் நிராகரிப்பு: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தி மேம்பாட்டு ஆணைய வலைதளத்தில் மசூதியின் வரைபடம் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆனால், விதிகளின்படி மசூதிக்கான துணை மற்றும் நில ஆவணங்களை அறக்கட்டளை சமர்ப்பிக்கவில்லை. இதன் விளைவாக, வரைபடம் சில மாதங்களில் உ.பி. அரசால் விதிப்படி நிராகரிக்கப்பட்டது.
இதுகுறித்து சன்னி வக்பு வாரியம் மற்றும் அறக்கட்டளையின் தலைவருமான ஜுபேர் அகமது பரூக்கி கூறுகையில், ‘‘உ.பி. அரசின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட வரைபடத்தை மாற்றி அமைக்க மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவானது. இதன் காரணமாக நாங்கள் துணை மற்றும் நில ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. உ.பி. அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட வரைபடத்தில் இரண்டு ஓவல் வடிவ மினார்கள் இருந்தன. இதற்கு உறுப்பினர்கள் தெரிவித்த எதிர்ப்பால், 5 மினார்கள் கொண்ட ஒரு குவி மாடம் கொண்ட வரைபடம் தயாரிக்கப்படுகிறது. மசூதியின் மதிப்பிடப்பட்ட செலவு ரூ.65 கோடி. ஆனால், இன்றுவரை ரூ.3 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. எனவே மசூதியின் கட்டுமானம் தற்போதைக்கு சாத்தியமில்லை’’ என்றார்.
ஆர்வம் காட்டவில்லை: இப்பிரச்சினையில் தனிபூர்வாசியான தவுகீர் அலி கூறும்போது, ‘‘உ.பி. சன்னி வக்பு வாரியமும், அறக்கட்டளையும் எதையும் செய்யக்கூடாது என்ற ஒரு அழுத்தத்தில் இருப்பது போல் தெரிகிறது. ஏனெனில், மசூதிக்கான நிலத்தைப் பார்வையிட வந்த முஸ்லிம் செல்வந்தர்கள் பலர் கட்டிட நிதி அளிக்க விரும்புவதாக எங்களிடம் கூறினர். அவற்றை சிரத்தையுடன் வசூல் செய்வதில் அறக்கட்டளையினர் எந்த ஆர்வமும் காட்டவில்லை’’ என்றார்.







