கேரள மாநிலத்தில் விருது பெற்ற 62 வயது விவசாயி ஒருவர் கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் செறுபுழா அருகே உள்ள இடவரத்தைச் சேர்ந்தவர் அம்பாட்டு இலியாஸ் (62). விவசாயியான இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கண்ணூர் மற்றும் அண்டை மாவட்டமான காசர்கோடு மலைப் பகுதிகளில் உள்ள நிலத்தை குத்தகைக்கு எடுத்து காய்கறி பயிரிட்டு வந்தார்.
மேலும் மாநில அரசின் சிறந்த விவசாயிக்கான விருதையும் பெற்றுள்ளார். இந்த பருவத்தில் அவர் சுமார் 2,500 வாழைக்கன்றுகளை நட்டிருந்தார். ஆனால், எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு இலியாஸ் தனது பண்ணையில் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். பல லட்சம் ரூபாய் கடன் சுமை காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாகக் சந்தேகிக்கப்படுகிறது.













