எரிபொருள், காஸ் தட்டுப்பாட்டை தீர்க்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெறும் போரின் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள், காஸ் தட்டுப்பாட்டை தீர்க்க வேண்டும்.
தட்டுப்பாட்டை காரணம் காட்டி எரிபொருள் விலையை ஏற்றி விற்கும் நிறுவனங்கள் மீது தமிழக அரசு மற்றும் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அண்ணா சாலை தாராப்பூர் டவர்ஸ் அருகே நேற்று நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சிஐடியு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.ஆட்டோ ஓட்டுநர்கள் நலச் சங்கத்தின் மாநில செயல் தலைவர் பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் 25 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்க முடியவில்லை.
இன்றைக்கும் அந்த எண்ணிக்கை கூடும், எரிபொருள் தட்டுப்பாட்டால் தனியார் டாக்சி சேவை நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியுள்ளன. இதனை மத்திய, மாநில அரசுகள் சீர் செய்ய வேண்டும்.
எரிபொருள் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மட்டும் சம்பந்தப்பட்டது கிடையாது. விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கு ஆட்டோக்கள்தான் ஆம்புலன்ஸ். எனவே தமிழக அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.














