Home விளையாட்டு செய்திகள் ஆஸி. ‘ஒயிட் பால்’ கிரிக்கெட் அரசன்: கிளென் மேக்ஸ்வெல் ஓய்வு!

ஆஸி. ‘ஒயிட் பால்’ கிரிக்கெட் அரசன்: கிளென் மேக்ஸ்வெல் ஓய்வு!

0

ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

38 வயதான மேக்ஸ்வெல், ஆஸ்திரேலிய அணிக்காக 14 ஆண்டுகள் விளையாடிய நிலையில், இனி விக்டோரியாவுக்காக 50 ஓவர் மற்றும் நான்கு நாள் போட்டிகளிலும் கூட விளையாடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். எனினும், டி20 ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட உள்ளார்.

2012-ம் ஆண்டில் ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் கண்ட மேக்ஸ்வெல், ஆஸ்திரேலிய அணிக்காக 149 ஒருநாள் போட்டிகளில் 3,990 ரன்களையும், 130 டி20 சர்வதேச போட்டிகளில் 2,897 ரன்களையும் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 201 ரன்களும், டி20 சர்வதேச போட்டிகளில் 145 ரன்களும் அவரது அதிகபட்ச ஸ்கோர்களாகும். டி20 சர்வதேச போட்டிகளில் 5 சதங்கள் அடித்துள்ள அவர், இந்த சாதனையில் இந்தியாவின் ரோஹித் சர்மாவுடன் இணைந்து உலக அளவில் முதலிடத்தில் உள்ளார்.

‘தி பிக் ஷோ’ என்று செல்லமாக அழைக்கப்படும் மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியாவின் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் நவீன கால ஜாம்பவான்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 2015 மற்றும் 2023-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும், 2021-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற அணியிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.

அந்த பிரமிப்பூட்டிய 201 ரன்கள்…!

2023 ஒருநாள் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல் ஆடிய ஆட்டம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் மறக்க முடியாத அத்தியாயமாக அமைந்தது.

மும்பை வான்கடே மைதானத்தில் 292 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியா 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, கடுமையான தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட நிலையிலும் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 128 பந்துகளில் 201 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார். ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் அடித்த முதல் இரட்டைச் சதம் இதுவாகும். அன்று ஆப்கன் அணியினர் இவருக்கு கோட்டை விட்ட கேட்ச்கள் இன்றும் அவர்கள் மனதில் நீங்கா வடுவாகவே இருக்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில்…

மேக்ஸ்வெல் 2013 முதல் 2017 வரை ஆஸ்திரேலிய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். 14 இன்னிங்ஸ்களில் 339 ரன்கள் எடுத்த அவர், 26.07 சராசரியுடன் ஒரு சதம் அடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக ராஞ்சியில் அடித்த 104 ரன்கள் அவரது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர். பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 4 விக்கெட்டுக்கு 127 ரன்கள் கொடுத்ததாக அமைந்துள்ளது.

ஷெஃபீல்ட் ஷீல்ட் மற்றும் முதல் தர கிரிக்கெட்

விக்டோரியா அணிக்காக உள்நாட்டுப் போட்டிகளில் அறிமுகமான மேக்ஸ்வெல், மொத்த முதல் தர கிரிக்கெட்டில் 69 போட்டிகளில் 4,147 ரன்கள் குவித்துள்ளார். இதில் 7 சதங்களும் 24 அரைசதங்களும் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 278 ரன்கள். பந்துவீச்சிலும் 78 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள அவர், 5 விக்கெட்டுக்கு 40 ரன்கள் என்ற சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் அவரது பேட்டிங் சராசரி 39.49; பந்துவீச்சு சராசரி 41.48.

விக்டோரியாவுக்காக அவரது அறிமுகம் 2010-11 சீசனில் நடைபெற்றது. ஒன் டே கப் போட்டிகளில் 2009-10 சீசனில் அறிமுகமானார்.

உள்ளூர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் சாதனை

லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல் 227-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி, சுமார் 6,000 ரன்கள் குவித்துள்ளார். 8 சதங்கள், 33 அரைசதங்கள் மற்றும் 201 நாட்-அவுட் அவரது முக்கிய சாதனைகளில் அடங்கும். பந்துவீச்சில் 120-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் மேக்ஸ்வெலின் தாக்கம் இன்னும் குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் பல்வேறு டி20 லீக்குகளில் விளையாடியுள்ள அவர், 500-க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் 11,000-க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். 150-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட் அவரது அதிரடி பேட்டிங்கின் தனித்துவத்தை காட்டுகிறது. பந்துவீச்சிலும் 200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் 141 போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல், 2,819 ரன்கள் குவித்துள்ளார். 95 ரன்கள் அவரது அதிகபட்ச ஸ்கோர்; 18 அரைசதங்களையும் அடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்காக மொத்தம்

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகள் என மூன்று வடிவங்களிலும் சேர்த்து ஆஸ்திரேலியாவுக்காக மேக்ஸ்வெல் 286 போட்டிகளில் விளையாடியுள்ளார். பேட்டிங்கில் 7,226 ரன்களும், பந்துவீச்சில் 136 விக்கெட்டுகளும் அவரது சர்வதேச சாதனையாகும். குறுகிய வடிவ சர்வதேச கிரிக்கெட்டில் மட்டும் 128 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார்.

“சற்று வருத்தமாகவும், அதே நேரத்தில் தவிர்க்க முடியாத முடிவாகவும் இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், விக்டோரியாவுக்கான 50 ஓவர் மற்றும் நான்கு நாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்” என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் சர்வதேச அத்தியாயத்தை முடித்துள்ள மேக்ஸ்வெல், இனி மெல்பர்ன் ஸ்டார்ஸ் உள்ளிட்ட டி20 ஃப்ரான்சைஸ் அணிகளுக்காக தொடர்ந்து விளையாட உள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version