ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 13-வது நாளான நேற்று ஆடவ ஒற்றையர் பிரிவில் அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. 10 முறை சாம்பியனும், 7-ம் நிலை வீரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 2-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவேரேவுடன் மோதினார். முதல் செட் டைபிரேக்கர் வரை சென்ற நிலையில் ஜோகோவிச் 6-7 (5-7) என பறிகொடுத்தார். இதன் பின்னர் ஜோகோவிச் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் அலெக்சாண்டர் ஜிவேரேவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
கால் இறுதி போட்டியின் போது ஜோகோவிச்சின் இடது காலில் காயம் ஏற்பட்டிருந்தது. ஜிவேரேவுக்கு எதிரான ஆட்டத்தின் போது காயத்தின் தன்மை அதிகமானதால் ஜோகோவிச் பாதியில் வெளியே வேண்டிய நிலை ஏற்பட்டது. அலெக்சாண்டர் ஜிவேரேவ் முதன் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் அவர், நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீரருமான இத்தாலியின் ஜன்னிக் சின்னருடன் மோதுகிறார். ஜன்னிக் சின்னர், அரை இறுதி சுற்றில் 21-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டனை 7-6 (7-2), 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.














