ஆஸ்​திரேலிய ஓபன் டென்னிஸ்: அரை இறு​தி சுற்றில் ஜோகோ​விச், சின்னர்

0
55

ஆஸ்​திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச் அரை இறு​திக்கு முன்னேறி​னார். அதேவேளை​யில் முன்​னணி வீராங்கனைகளான இகா ஸ்வியாடெக், அனிசிமோவா ஆகியோர் கால் இறுதி சுற்​றில் தோல்வி அடைந்​தனர்.

ஆஸ்​திரேலி​யா​வின் மெல்​பர்ன் நகரில் ஆண்​டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொட​ரான ஆஸ்​திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதன் 11-வது நாளான நேற்று ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் நடை​பெற்ற கால் இறுதி ஆட்​டம் ஒன்​றில் 4-ம் நிலை வீரரும் 10 முறை சாம்​பிய​னான செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச், 5-ம் நிலை வீர​ரான இத்​தாலி​யின் லாரென்சோ முசெட்​டி​யுடன் மோதி​னார்.

இதில் தொடக்​கம் முதலே ஜோகோ​விச்​சுக்கு கடும் சவால் கொடுத்​தார் முசெட்​டி. முதல் 2 செட்​களை​யும் 6-4, 6-3 என கைப்​பற்​றி​னார். இதனால் ஆட்​டத்​தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் துர​திருஷ்ட​வச​மாக 3-வது செட்​டில் முசெட்டி 1-3 என்ற கணக்​கில் பின்​தங்​கி​யிருந்த போது மேல் வலது காலில் ஏற்​பட்ட காயம் காரண​மாக போட்டியில் இருந்து வெளி​யேறி​னார். இதனால் ஜோகோவிச் அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

மற்​றொரு கால் இறு​தி​யில் 2-ம் நிலை வீரரும், நடப்பு சாம்​பியனு​மான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர், 8-ம் நிலை வீரரான அமெரிக்​கா​வின் பென் ஷெல்​ட​னுடன் மோதினார். இதில் ஜன்​னிக் சின்​னர் 6-3, 6-4 6-4 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்னேறினார். அரை இறுதி சுற்​றில் ஜன்​னிக் சின்​னர், நோவக் ஜோகோ​விச்​சுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறார்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் 2-ம் நிலை வீராங்​க​னை​யான போலந்​தின் இகா ஸ்வி​யாடெக், 5-ம் நிலை வீராங்​க​னை​யான கஜகஸ்​தானின் எலெனா ரைபகி​னா​வுடன் மோதி​னார். ஒரு மணி நேரம் 35 நிமிடங்கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் எலெனா ரைபகினா 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்​கில் இகா ஸ்வியாடெக்கை தோற்​கடித்து அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

மற்​றொரு கால் இறுதி சுற்​றில் 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்​கா​வின் அமன்டா அனிசிமோவா, 6-ம் நிலை வீராங்​க​னை​யான சகநாட்​டைச் சேர்ந்த ஜெசிகா பெகுலா​வுடன் பலப்​பரீட்சை நடத்​தி​னார். இதில் ஜெசிகா பெகுலா 6-2, 7-6 (7-1) என்ற செட் கணக்​கில் அனிசிமோ​வாவை வீழ்த்தி அரை இறுதி சுற்​றில் கால்பதித்தார். அரை இறுதி சுற்​றில் எலெனா ரைபகினா – ஜெசி​கா பெகுலா பலப்​பரீட்​சை நடத்​துகின்​றனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here