இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி இருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில் 2-வது ஆட்டம் நேற்று கான்பெர்ராவில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீராங்கனையான ஜார்ஜியா வால் 57 பந்துகளில், ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 88 ரன்களும், பெத் மூனி 39 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்களும் விளாசினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.5 ஓவர்களில் 128 ரன்களை குவித்து அசத்தியது. இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி 2 விக்கெட்களை கைப்பற்றினார். 164 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய மகளிர் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பீரித் கவுர் 30 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சேர்த்தார். ஸ்மிருதி மந்தனா 31, ஷபாலி வர்மா 29, ரிச்சா கோஷ் 19, கிரந்தி கவுடு 12 ரன்கள் சேர்த்தனர்.
ஆஸ்திரேலிய அணி சார்பில் ஆஷ்லே கார்ட்னர் 3 விக்கெட்களை வீழ்த்தினார். கிம் கரேத், அனாபெல் சுதர்லேண்ட், சோஃபி மோலினக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 19 ரன்கள் வித்தியாசத் தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி மகளிர் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்துள்ளது. கடைசி மற்றும் 3-வது போட்டி நாளை (21-ம் தேதி) அடிலெய்டில் நடைபெறுகிறது.














