”காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய், அவரது மனைவி எலிசபெத்திடம் பாகிஸ்தான் தொடர்பு குறித்து மத்திய ஏஜென்சி விசாரிக்க வேண்டும்” என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வலியுறுத்தி உள்ளார்.
அசாம் மாநிலத்தின் காங்கிரஸ் எம்.பி.கவுரவ் கோகோய். இவரது மனைவி பிரிட்டனைச் சேர்ந்த எலிசபெத் கோல்பர்ன். இவர்கள் இருவருக்கும் பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாகிஸ்தானின் திட்டக் குழு ஆலோசகர் தவ்கீர் ஷேக்கிடம், கவுரவ் மனைவி எலிசபெத் பணியாற்றி உள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அவர் வேலை செய்தபோது, அந்நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு இந்தியாவின் ரகசிய தகவல்களை அவர் அளித்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா சிறப்பு விசாரணை குழு அமைத்தார். இந்தக் குழு தீவிர விசாரணை நடத்தி 44 பக்க அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
இதையடுத்து குவாஹாட்டியில் பத்திரிகையாளர்களை நேற்று சந்தித்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியதாவது: காங்கிரஸ் எம்.பி. கவுரவ், அவரது மனைவி எலிசபெத் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. அவை நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை. எனவே, இருவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வலியுறுத்துவோம்.
பாகிஸ்தான் நிறுவனத்திடம் இருந்து எலிசபெத் சம்பளம் பெற்றுள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அத்துடன் அமெரிக்க செனட்டர் டாம் உடால் என்பவரிடம் எலிசபெத் பணியாற்றி இருக்கிறார். அத்துடன், அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸிடமும் வேலை செய்திருக்கிறார். அட்டாரி எல்லை வழியாக சாதாரண பெண்போல எலிசபெத் பாகிஸ்தான் சென்று வந்துள்ளார்.
கவுரவ் கோகோயை திருமணம் செய்த பிறகு, எலிசபெத் 9 முறை பாகிஸ்தான் சென்று வந்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு கவுரவ், எலிசபெத் இருவரும் பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டனர். ராகுல் குடும்பத்துக்கு கவுரவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகவும் நெருக்கமானவர்கள். இந்த விவகாரத்தில் ராகுல் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.
கவுரவ் மறுப்பு: இவரது குற்றச்சாட்டு குறித்து கவுரவ் கோகோய் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ”முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் பத்திரிகையாளர் சந்திப்பு, சூப்பர் தோல்வி” என்று கூறியுள்ளார்.



