கத்தாரில் உள்ள தோகா நகரில் வரும் 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா ‘ஏ’ உள்ளிட்ட 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா ‘ஏ’, பாகிஸ்தான் ‘ஏ’, ஐக்கிய அரபு அமீரகம் ‘ஏ’, ஓமன் ‘ஏ’ ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்தியா ‘ஏ’ அணி தனது முதல் ஆட்டத்தில் 14-ம் தேதி ஐக்கிய அரபு அமீரக அணியுடன் மோதுகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்தியா ‘ஏ’ அணியை தேர்வுக்குழுவினர் அறிவித்துள்ளனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடி வருகிறார். 32 வயதான ஜிதேஷ் சர்மா, ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணியிலும் முக்கிய பங்குவகித்திருந்தார்.
ஐபிஎல் இளம் நட்சத்திரங்களான வைபவ் சூர்யவன்ஷி, பிரியன்ஷ் ஆர்யா ஆகியோரும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடரில் சேர்க்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் ரஞ்சி கோப்பை தொடரில் நாகாலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட்கள் வீழ்த்திய தமிழக அணியை சேர்ந்த இடதுகை மிதவேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங்குக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா ‘ஏ’ அணி விவரம்: ஜிதேஷ் சர்மா (கேப்டன்), பிரியன்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, நெஹல் வதேரா, நமன் திர், சூர்யான்ஷ் ஷேட்ஜ், ரமன்தீப் சிங், ஹர்ஷ் துபே, அஷுதோஷ் சர்மா, யாஷ் தாக்குர், குர்ஜப்னீத் சிங், விஜய் குமார் வைஷாக், யுத்விர் சிங் சாரக், அபிஷேக் போரேல், சுயாஷ் சர்மா.














