மத்திய பட்ஜெட் 2026-27-ல் ஒரு மலையாளி என்ற முறையில் தனக்கு திருப்தி அளிக்கும் எதுவும் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறினார்.
திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆயுர்வேதத்தில் நீண்ட பாரம்பரியம் கொண்ட கேரளாவுக்கு ஓர் ஆயுர்வேத நிறுவனம் தேவை. அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் தொடர்பான அறிவிப்புக்காக காத்திருந்தோம். ஆனால் நாங்கள் கேரளாவின் பெயரை கேட்கவில்லை.
மீனவர்கள் மற்றும் தேங்காய் தொடர்பான அறிவிப்புகளில் கேரளா இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவற்றிலும் கேரளா குறிப்பிடப்படவில்லை. கப்பல் பழுதுபார்ப்பு தொடர்பான அறிவிப்புகளில் வாராணசி மற்றும் பாட்னாவின் பெயர்களை குறிப்பிட்டனர்.
ஆனால் கேரளாவை குறிப்பிடவில்லை. இது சற்று ஆச்சரியமாக உள்ளது. என்றாலும் பட்ஜெட் ஆவணத்தில் கேரளாவுக்கான திட்டங்கள் இடம்பெற்றிருக்கும் என கருதுகிறேன். அதை இன்னும் நான் படிக்கவில்லை.
அமைச்சரின் உரையில் மிகக் குறைவான விவரங்களே இருந்தன. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சசி தரூர் கூறும்போது, “ஒரு மலையாளி என்ற முறையில் இந்த பட்ஜெட்டில் எனக்கு திருப்தி அளிக்கும் எதுவும் இல்லை” என்றார்.



