உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் 2027, ஜனவரி 14 முதல் அர்த்த கும்ப மேளா நடைபெற உள்ளது. இதை பிரம்மாண்டமாக நடத்த மாநில பாஜக அரசு தயாராகி வருகிறது.
இந்நிலையில் அர்த்த கும்பமேளா நாட்களில் உத்தராகண்டின் 100-க்கும் மேற்பட்ட கங்கை படித்துறைகள், முக்கிய இந்து வழிபாட்டுத் தலப்பகுதியில் இந்துக்கள் அல்லாதோருக்கு தடை விதிக்க இந்துத்துவாவினர் வலியுறுத்துகின்றனர். இதுதொடர்பாக 1916-ல் ஆங்கிலேயர் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஹரித்வார் நகராட்சி மன்ற துணை விதிகளை கங்கை சபையின் தலைவர் நிதின் கவுதம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விதிகளின்படி, ஹரித்வார் நகராட்சிப் பகுதியில் இந்துக்கள் அல்லாதோர் நிலம் வாங்க முடியாது. இந்துக்கள் அல்லாத கடை வியாபாரிகள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இந்துக்கள் அல்லாத அதிகாரிகளை பணி அமர்த்தவும் முடியாது. எனினும், காலப்போக்கில், உள்ளூர் மக்கள் கூட இந்த விதிகளைப் பெரிதாகப் பின்பற்றுவதில்லை. தற்போது, கும்பமேளா வரவுள்ள நிலையில், இந்துத்துவாவினர் ஆங்கிலேயர் காலத்து மரபுகளை மீண்டும் அமல்படுத்தக் கோரியுள்ளனர்.
ஹரித்வார் கங்கை சபையின் மூத்த நிர்வாகி உஜ்வல் பண்டிட் கூறுகையில், ‘‘முன்னாள் ஆளுநர் அஜீஸ் குரேஷி, மார்கரெட் ஆல்வா, சமாஜ்வாதி தலைவர் ஆசம் கான், நடிகர் சல்மான்கான், நடிகை கத்ரீனா கைஃப் உள்ளிட்ட இந்து அல்லாத பிரமுகர்கள் ஹரித்வார் துணை விதிகளை மதித்துள்ளனர். ஆளுநர் அஜீஸ் குரேஷி, ஹர்-கி-பவுரிக்கு செல்லாமல் ஆரத்தியை, மால்வியா தீவில் இருந்து பார்த்தார்” என்றார்.
இந்நிலையில் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஹரித்வாரின் புனிதம் மற்றும் தெய்வீகத் தன்மையைப் பேணுவதற்காக அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன. எந்தவொரு பழைய சட்டத்தையும் அல்லது துணை விதிகளையும் மீற அரசு விரும்ப
வில்லை. மத நம்பிக்கைகள், அரசியலமைப்பு சட்டம் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.



