ஒடிசாவின் கந்தமால் மாவட்டம், பலிகுடாவில் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு முகமையில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் வைகுண்ட நாத் பெஹ்ரா.
இவர் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு மாநில லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புவனேஸ்வர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து புவனேஸ்வர், பாலசோர், ஜாஜ்பூர் மற்றும் பலிகுடாவில் பெஹ்ராவுக்கு தொடர்புடைய 9 இடங்களில் நேற்று முன்தினம் ஒரேநேரத்தில் சோதனை நடைபெற்றது. இதில் ரூ.2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “இந்த சோதனையில் பொறியாளர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்புடையதாக 5 அடுக்குமாடி கட்டிடங்களை கண்டறிந்துள்ளோம். இதில் புவனேஸ்வரில் சுமார் 10,500 சதுர அடியில் அமைந்துள்ள 4 மாடி கட்டிடமும் அடங்கும். மேலும் புவனேஸ்வர் மற்றும் ஜாஜ்பூர் மாவட்டங்களில் 4 வீடுகள் மற்றும் புவனேஸ்வரின் முக்கிய இடங்களில் 7 மனைகள், ஜாஜ்பூர், பாரிபடாவில் பல மனைகள் என மொத்தம் 13 நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
குடும்பத்தினரின் வங்கி லாக்கர்களில் இருந்து சுமார் ரூ.2 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. மொத்த சொத்துகளையும் மதிப்பிட்ட பிறகு சட்டரீதியிலான நடவடிக்கை தொடரும்’’ என்றனர். வைகுண்ட நாத் பெஹ்ரா கடந்த 1999-ம் ஆண்டு இளநிலை பொறியாளராக ரூ.6,000 மாதச் சம்பளத்தில் அரசுப் பணியில் சேர்ந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் உதவி செயற்பொறியாளராகப் பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
