டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் போராட்ட களத்தில் மேலும் ஒரு விவசாயி நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
டெல்லியின் ஷம்பு மற்றும் கன்னவுரி எல்லையில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்க வகை செய்யும் சட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
இதில் விவசாயிகள் சங்க பிரதிநிதி ஜெகஜித் சிங் தல்லிவால் (70) கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருடைய உடல்நிலை மோசமடைந்து வருவதால் கவலை அடைந்த ரஞ்சோத் சிங் என்ற விவசாயி கடந்த டிசம்பர் 18-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், ஷம்பு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த, பஞ்சாப் மாநிலம் டார்ன் டரன் மாவட்டம் பஹுவிந்த் கிராமத்தைச் சேர்ந்த ரேஷம் சிங் (55) நேற்று விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பட்டியாலாவில் உள்ள மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். ஆனால், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


