ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தொடர்ந்து பேருந்து விபத்துகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த மாதம் 24-ம் தேதி கர்னூல் அருகே பேருந்து தீப்பற்றி 20 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்து அனைவரையும் உலுக்கியது. இதை தொடர்ந்து தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் தாண்டூரு அருகே கடந்த 3-ம் தேதி அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ஜெயபுரா எனும் ஊருக்கு ஒடிசா மாநில அரசு பேருந்து நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஆந்திரா -ஒடிசா எல்லையில், பார்வதிபுரம் மன்யம் மாவட்டம், ரொட்டவலசா எனும் இடத்தில் நேற்று காலை 7.45 மணியளவில், திடீரென அந்த பேருந்திலிருந்து புகையும், நெருப்பும் கிளம்பியது.
அதை கவனித்த ஓட்டுநர், பேருந்தை சாலை ஓரத்தில் நிறுத்தி, 5 பயணிகளை அவசரமாக கீழே இறங்கிவிட்டார். சற்று நேரத்திலேயே பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது. ஓட்டுநர் உரிய நேரத்தில் கவனித்ததால் அவரும், நடத்துனர் மற்றும் 5 பயணிகள் என மொத்தம் 7 பேர் உயிர் தப்பினர்.
தகவல் அறிந்ததும், ஆந்திர போலீஸார், தீயணைப்பு படையினர் சென்று தீயை முழுவதுமாக அணைத்தனர். அமைச்சர் சந்தியா ராணி இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். வெளி மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகள் சரிவர உள்ளதா? என அறிக்கை தர வேண்டுமென அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.














