ஆந்திர மாநிலம், குண்டூரை அடுத்த பாபட்லா மாவட்டம், கர்மசேது எனும் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்யலட்சுமி எனும் ராஜி (23).
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தில் எம்எஸ் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக ராஜி காய்ச்சல், இருமல் மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். 7-ம் தேதி காலையில் அவர் படுக்கையில் இருந்து எழாததால் தோழிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், ராஜி இரவு தூக்கத்திலேயே இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். அவரது இறப்புக்கான காரணம் குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே ராஜியின் மரணம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அவரது உடலை ஆந்திரா கொண்டு வர ஏற்பாடு நடந்து வருகிறது. ராஜியின் படிப்புக்காக வங்கிக் கடன் பெற்றுள்ள அவரது குடும்பத்தின் நிலையை தோழிகள் சமூக வலைதளத்தில் எடுத்துக்கூறி நிதி திரட்டி வருகின்றனர்.














