ராமதாஸ் கூட்டிய ஆலோசனை கூட்டத்தை 3-வது நாளாக புறக்கணித்த அன்புமணி

0
159

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தை 3-வது நாளாக அன்புமணியும், அவரது ஆதரவாளர்களும் புறக்கணித்தனர்.

பாமகவில் உட்கட்சி மோதல் நீடித்து வரும் நிலையில், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் 3-வது நாளாக நிறுவனர் ராமதாஸ் நேற்று நடத்தினார். இதில் வன்னியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆனால், பாமக தலைவர் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்றும் இக்கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பு ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கவில்லையெனில் கடும் போராட்டம் நடத்துவோம்.

வன்னியர் சங்கத்தை வலுப்படுத்தவும், தேர்தலில் பெரிய வெற்றியை பெறவும், தேர்தலில் வன்னியர் சங்கத்தின் பங்களிப்பு என்ன என்று ஆலோசிக்கவும் இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் எடுக்கும் முடிவுகளின்படி மாவட்டந்தோறும் நடத்தப்பட உள்ள கூட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன்” என்றார்.

பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறும்போது, “வன்னியர் சங்கம் மற்றும் பாமக எந்த சமுதாயத்துக்கும் எதிரானது அல்ல. வன்னியர்களுக்கு உரிமை வேண்டும். அதேபோல, அனைத்து சமுதாயத்துக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. திமுக ஆட்சியில் அது நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம்.

ஆனால் நிறைவேற்றப்படவில்லை. பாமக மாவட்டத் தலைவர்கள், செயலாளர்களை பதவியில் இருந்துராமதாஸ் நீக்கப் போவதாக வதந்தி பரப்பிவிட்டுள்ளனர். பாமகவில் ஏற்பட்டுள்ள சலசலப்புக்கு, விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். ராமதாஸும், அன்புமணியும் விரைவில் சந்தித்துப் பேசுவார்கள்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here