உத்தர பிரதேசம் லக்னோவில் 71 வயது முதியவர் ஒருவர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதியுள்ளார்.
உத்தர பிரதேசம் லக்னோவைச் சேர்ந்தவர் அசோக் பாஹர்(71). உத்தராகண்டில் உள்ள இந்திய மருந்துள் நிறுவனத்தில் (ஐடிபிஎல்) மார்க்கெட்டிங் பிரிவு தலைவராகவும், வெளியுறவுத்துறையில் ஆலோசகராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி டாக்டர். மஞ்சு பாஹர் மகப்பேறு மருத்துவர்.
அசோக் பாஹரின் தந்தையும் லக்னோவில் பிரபல மருத்துவராக இருந்தவர். அதனால் இவரும் மருத்துவராக வேண்டும் என இவரது தாய் விரும்பியுள்ளார். ஆனால், மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுகளில் இவரால் வெற்றி பெற முடியவில்லை. இவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் சுமார் 20 பேர் மருத்துவர்களாக உள்ளனர். பலர் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர்.
அதனால் தனது மருத்துவர் கனவை நிறைவேற்ற 71 வயதில் நீட் தேர்வு எழுதியுள்ளார் அசோக் பாஹர். இவர் மருத்துவராகி ஹெபடாலஜி படிப்பை முடித்து கல்லீரல் நோய் நிபுணராக வேண்டும் என விரும்புகிறார். 71 வயதில் இவர் நீட் தேர்வு எழுதும் செய்தி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.
பலர் இவரது முயற்சியை ஊக்குவித்தாலும், சிலர் இந்த வயதில் மருத்துவப் படிப்பது வீண், காலம் கடந்த செயல் என்றும் மற்றொருவரின் மருத்துவர் சீட் வாய்ப்பை கெடுப்பது போன்றது எனவும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
