தயாரிப்பாளர் சங்கம் – ஃபெப்சி பிரச்சினைக்கு சுமுக தீர்வு: வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்

0
12

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும், ஃபெப்சிக்கும் இடையே நீடித்த பிரச்சினையில் மத்தியஸ்தர் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு எட்டப்பட்டதால் வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் ஃபெப்சிக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய சங்கத்தை துவங்கி இருப்பதாக கூறி, ஃபெப்சி குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் ஃபெப்சி அமைப்பின் உறுப்பினர்கள் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும், ஒத்துழைப்பு வழங்க கூடாது என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஏப்ரல் 2-ம் தேதி ஃபெப்சி கடிதம் அனுப்பி இருந்தது.

இதனால் படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இரு சங்கங்கள் இடையேயான பிரச்சினையை தீர்ப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜனை மத்தியஸ்தராக நியமித்து பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி தன்பால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்தியஸ்தர் நடத்திய பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டதாக தயாரிப்பாளர் சங்கம் தரப்பிலும், ஃபெப்சி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here