அமெரிக்காவின் ஒஹியோ நகரில் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் அமெரிக்காவின் கோ கோ காஃப், செக் குடியரசின் சாரப் பெஜ்லெக்குடன் மோதினார்.
இதில் கோ கோ காஃப் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரை இறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, போலந்தின் இகா ஸ்வியாடெக்குடன் மோதினார். இந்த மோதலில் ஜெசிகா பெகுலா 7-5, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். சர்வதேச டென்னிஸ் அரங்கில் ஜெசிகா பெகுலாவின் 300-வது வெற்றியாக இது அமைந்தது. இறுதிப் போட்டியில் கோ கோ காஃப் – ஜெசிகா பெகுலா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
சின்சினாட்டி ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இரு அமெரிக்கர்கள் 56 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் மோத உள்ளனர். கடைசியாக 1970-ல் ரோஸி கசால்ஸ், நான்சி ரிச்சி மோதியிருந்தனர்.
