மாநிலங்களவை தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி செயல்படுவோம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதில் தொடர்புடைய, துணை முதல்வரின் நண்பர்களான ரிதீஸ், ஆகாஷ் ஆகியோரை விசாரித்தால் உண்மை தெரியும் என்று அமலாக்கத் துறை கூறியுள்ளது. அவர்கள் ஏன் பயந்து வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும்?
பிரதமர் மோடிக்கும், அமலாக்கத் துறைக்கும் பயப்பட மாட்டோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ளார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலின்போது அமலாக்கத் துறை சோதனைக்குப் பயந்துதான் கூட்டணிப் பேச்சு வார்த்தையை முடித்தார்களா? யார் ஆட்சி செய்தாலும், அமலாக்கத் துறை நடவடிக்கைகள் தொடரும்.
மாநிலங்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை நான் தனிப்பட்ட முறையில் கருத்து சொல்ல முடியாது. தலைமைதான் முடிவு செய்யும். எங்களிடம் இருப்பது 4 எம்எல்ஏ-க்கள்தான். தலைமை என்ன முடிவெடுக்கிறதோ, அதன்படி செயல்படுவோம். நாங்கள் அதிமுகவோடு கூட்டணியில் இருக்கிறோம். அதிமுகவுக்கு ஆதரவு தருமாறு கூறினால், ஆதரவு தருவோம்.
நகைக் கடன் பெறுவது தொடர்பான புதிய விதிமுறைகள் குறித்து, எங்கள் கமிட்டியில் பேசியுள்ளோம். இதுகுறித்து மத்திய நிதி அமைச்சருக்கு கருத்துகளைத் தெரிவிப்போம்.
திமுக ஆட்சியால் மக்களுக்கு ஏராளமான சிரமங்கள் உள்ளன. சொத்துவரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணம் ஆண்டுதோறும் அதிகரிப்பதால் தொழிற்சாலைகள் நடத்த முடிவதில்லை. காவல் துறையால் சட்டம்-ஒழுங்கை சரிவரப் பராமரிக்க முடியவில்லை. எனவே, மக்களுக்கு விரோதமான திமுக ஆட்சிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்.
மத்திய அரசு நிதி கொடுக்காததால் எந்த மாணவரும் பாதிக்கப்படவில்லை. ஏற்கெனவே, தமிழக முதல்வர் டெல்லியில் பிரதமரை தனியாக சந்தித்துப் பேசியுள்ளார். நிதி தொடர்பாக அவர் பேசினாரா என்பதை முதல்வர் தான் விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
யுபிஎஸ்சி தேர்வில் பெரியார் பெயருக்குப் பின்னால் ஜாதி சேர்க்கப்பட்ட விவகாரம் குறித்து கேட்டதற்கு, ‘‘ஜாதி பெயர் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது’’ என்றார்.














