தென்காசி தெற்கு மாவட்ட திமுக எல்லைக்குள் இருந்த ஆலங்குளம் தொகுதியை நெல்லை திமுக உட்கட்சி உரசல்கள் காரணமாக, அண்மையில் நெல்லை மேற்கு மாவட்ட திமுக எல்லைக்குள் மாற்றிவிட்டது திமுக தலைமை. இதனால், இம்முறை ஆலங்குளத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயபாலன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறார்.
தென்காசி வடக்கு மாவட்ட திமுகவின் கட்டுப்பாட்டில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதிகள் உள்ளன. இதன் செயலாளராக சங்கரன்கோவில் எம்எல்ஏ-வான ஈ.ராஜா இருக்கிறார். தென்காசி தெற்கு மாவட்ட திமுகவின் கட்டுப்பாட்டில் ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர் தொகுதிகள் இருந்தன. இதன் செயலாளராக வே.ஜெயபாலன் இருக்கிறார். இதில் ஆலங்குளம் தொகுதியை அண்மையில் நெல்லை மேற்கு மாவட்டத்தில் சேர்த்துவிட்டது தலைமை. இதுதான் ஜெயபாலனுக்கு இப்போது சிக்கலாகிவிட்டது.
கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் ஆலங்குளம், சங்கரன்கோவில் தொகுதிகளில் திமுக போட்டியிட்டது. வாசுதேவநல்லூரில் மதிமுகவும், தென்காசியில் காங்கிரஸும் கடையநல்லூரில் முஸ்லிம் லீக்கும் போட்டியிட்டன. இம்முறையும் திமுக கூட்டணிக் கட்சிகள் தங்களுக்கு அதே தொகுதிகளை உறுதி செய்யும் என்கிற கணிப்பு இருப்பதால் எஞ்சிய சங்கரன்கோவில், ஆலங்குளம் தொகுதிகள் மட்டுமே திமுகவுக்கு வழக்கம் போல் மிஞ்சும். இதில் சங்கரன்கோவில் தொகுதியை சிட்டிங் எம்எல்ஏ-வான ராஜா மாவட்டச் செயலாளராக இருப்பதால் அவருக்கே ஒதுக்கிவிடும் தலைமை.
எஞ்சிய ஒரு தொகுதியான ஆலங்குளம் தனக்குக் கிடைக்கும் என நினைத்துக் கொண்டிருந்தார் தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் ஜெயபாலன். ஆனால், அந்தத் தொகுதி இப்போது திருநெல்வேலி மேற்கு மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டுவிட்டதால் அதன் செயலாளர் ஆவுடையப்பனின் தயவை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார் ஜெயபாலன்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தென்காசி தெற்கு மாவட்ட திமுகவினர், “ஆலங்குளத்தின் தற்போதைய எம்எல்ஏ-வாக மனோஜ் பாண்டியன் இருக்கிறார். ஓபிஎஸ் அணியில் இருக்கும் இவர் புதிதாக ஒரு சின்னத்தில் இம்முறை போட்டியிட்டால் திமுகவுக்கு வாய்ப்பு பிரகாசிக்கும். அதனால் இம்முறை ஆலங்குளத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது. பழையபடியே தென்காசி தெற்கு மாவட்டத்துக்குள்ளேயே ஆலங்குளம் இருந்திருந்தால் ஜெயபாலனுக்கு ரூட் க்ளியராகி இருக்கும். ஆனால், இப்போது அவர் அப்படி எதிர்பார்க்க முடியாது.
இதைப் புரிந்துகொண்டு முன்னாள் மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாதன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, அவரது சகோதரர் ஆலடி எழில்வாணன், தொகுதி பொறுப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் ஆலங்குளத்துக்கு அடிபோட ஆரம்பித்துவிட்டார்கள். இவர்களுக்கு மத்தியில் ஜெயபாலனும் முயற்சியில் இருக்கிறார்.
இதில், சிவ பத்மநாதனும் கணேஷ்குமார் ஆதித்தனும் நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பனின் விசுவாசிகள் என்பதால் இவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு இருக்கிறது. இதைத் தவிர, கடந்த கால கசப்பான நிகழ்வுகளை புறந்தள்ளிவிட்டு பூங்கோதைக்கு கனிமொழி சிபாரிசு செய்தால் அவரும் ஆலங்குளத்துக்கான ரேஸில் இருப்பார்” என்கிறார்கள்.