நடிகர் அஜித் குமார் இப்போது சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்துள்ளார்.இந்த அணி, உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறது. துபாய், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் நடைபெற்ற ரேஸ்களில் பங்கேற்ற அவர் அணி,பார்சிலோனாவில் நடந்த கார் பந்தயத்தில் கடந்த வாரம் பங்கேற்றது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அஜித்குமாரை பார்க்க ரசிகர்கள் கூடினர். அதில் சிலர், அஜித்குமாரை பார்த்ததும் ஆரவாரம் செய்து விசிலடித்தனர்.
இதைக் கவனித்த அஜித் கோபமடைந்தார். விரலை அசைத்து, ‘அமைதியாக இருங்கள்’ என்ற சைகை செய்தார். உடனே ரசிகர்கள் ஆரவாரத்தை நிறுத்தி அமைதியானார்கள். இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித், பார்சிலோனா பந்தயத்தை முடித்துவிட்டு துபாய் திரும்பி இருக்கிறார். அடுத்து மலேசியாவில் டிசம்பர் மாதம் நடக்கும் கார் பந்தயத்தில் பங்கேற்க இருக்கிறார்.