மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் இரவு பார்ல் நகரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது.
ஷிம்ரன் ஹெட்மயர் 32 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 48 ரன்களும் ரோவ்மன் பவல் 25 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்களும் பிரண்டன் கிங் 16 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 27 ரன்களும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஜார்ஜ் லின்டே 3 விக்கெட்களையும் கார்பின் போஷ், கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
174 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 17.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் எய்டன் மார்க்ரம் 47 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 86 ரன்களும், ரியான் ரிக்கெல்டன் 32 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 40 ரன்களும் விளாசினர். முன்னதாக லூவான் டி பிரிட்டோரியஸ் 28 பந்துகளில், ஒரு சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது போட்டி செஞ்சுரியன் நகரில் இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறுகிறது.மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம்.



