அமைச்சர் பொன்முடியை கைது செய்ய கோரி அதிமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

0
148

இந்து மதம் குறித்தும் பெண்கள் குறித்தும் சர்ச்சையாக பேசிய அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை, அன்பகத்தில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடி ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார். இதைக் கண்டித்து அதிமுக சார்பில் மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே அதிமுக மகளிரணியினர் கருப்பு சேலை அணிந்து ஆர்ப்பாட்டத்துக்கு வந்திருந்தனர். அமைச்சர் பொன்முடி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும், அவரை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு தலைமை வகித்து மகளிரணிச் செயலாளர் பா. வளர்மதி பேசியதாவது: ஆபாச பேச்சாளரை திமுக அரசு அமைச்சராக வைத்திருக்கக் கூடாது. அவர் பேசிய பேச்சை தாய்மார்களால் மன்னிக்க முடியாது. இந்து சமுதாய பெண்களை அவதூறாக பேசியவரை அமைச்சர் பதவியில் வைத்திருப்பது முதல்வர் ஸ்டாலினுக்கு கேடு.

அதிகளவில் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்த பெண்களை கேவலமாக பேசிய ஒருவரை தனது சகோதரி சொன்ன பிறகுதான் முதல்வர் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கினார். அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்காவிட்டால் அதிமுக பொதுச்செயலாளர் அனுமதியை பெற்று, மாநிலம் முழுவதும் பெண்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமைப்புச் செயலாளர் எஸ்.கோகுல இந்திரா, தலைமைப் பேச்சாளர் நிர்மலா பெரியசாமி, செய்தித் தொடர்பாளர் அப்சரா ரெட்டி, மகளிரணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் உள்ளிட்ட ஏராளமான மகளிரணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here