அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு 2017-ல் சென்ற கார்த்தியாயினி, தற்போது பாஜக மாநில பொதுச் செயலாளராக உள்ளார். வேலூர் மாநகராட்சி மேயராக பணியாற்றியதோடு, 2024 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவனை எதிர்த்து போட்டியிட்ட அனுபவமும் கொண்டவர். தமிழக அரசியல் நிலவரம், அதிமுகவின் உட்கட்சி பிரச்சினை, கட்சிகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் போன்றவை குறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் கார்த்தியாயினி. அவரது பேட்டியிலிருந்து…
அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த உங்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கிறதா?
பாஜகவில் பெண்களுக்கான அங்கீகாரம் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக உழைப்பவர்கள் அங்கீகரிக்கப்படுகிறார்கள். கட்சியில் இணைந்ததும், மாநில மகளிர் அணி செயலாளர், பாஜக மாநில செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டது. தற்போது மாநில பொதுச் செயலாளராக 2-வது முறை பதவி வகிக்கிறேன். கட்சி கொடுக்கும் பொறுப்பை திறம்பட நேரம் ஒதுக்கி செய்பவர்களுக்கு அதற்குரிய முழு அங்கீகாரத்தை பாஜக வழங்கும்.
நாம் தமிழர் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியும் மகளிருக்கு உரிய இடங்களை ஒதுக்குவதில்லையே? உங்கள் கட்சியில் மகளிருக்கு 33 சதவீதம் இடங்களை ஒதுக்கும்படி கேட்டு குரல் கொடுப்பீர்களா?
நாம் தமிழர் கட்சியில் அங்கீகாரம் கிடைக்கவில்லை என அந்த கட்சியில் இருந்து ஒரு பெண் விலகி வெளியேறிவிட்டார். பாஜகவில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படுகிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டே நான் தான். நான் ஒரு பட்டியலின சமுதாயத்தை சார்ந்த பெண். இருந்தபோதிலும், இங்கு சாதியை பார்க்கவில்லை. அவர்களுடையை உழைப்பை மட்டும் பார்த்து அங்கீகாரத்தை கொடுத்துள்ளனர். இதேபோல, மாநில செயலாளர், மாவட்ட தலைவர், மண்டல் தலைவர் என அனைத்து பொறுப்புகளிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு இடஒதுக்கீடு என பலரும் சொல்லுவதற்கு முன்பே, அதை செயல்படுத்தி காட்டியது பாஜக தான்.
தமிழகத்தில் உங்கள் கூட்டணி ஆட்சியைப் பிடிப்பது எந்த அளவுக்கு முக்கியத்துவம் என்று கருதுகிறீர்கள்?
தமிழகத்தில் எங்கள் கூட்டணி ஆட்சியை பிடிப்பது அதி முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் முழு வேகத்துடன் களப்பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.
பிரிந்து கிடக்கும் அதிமுகவால் உங்கள் கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் பாதிக்காதா?
அதிமுகவில் சில சொற்பமான அளவில் கருத்து வேறுபாடு காரணமாக கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்படுபவர்கள் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்கிறது. அதிமுகவில் கடைசி தொண்டன் இருக்கும் வரை, எம்ஜிஆர் பாட்டை கேட்கும் போதும், ஜெயலலிதா பேச்சு ஒலிக்கும் போதும் அங்கு இரட்டை இலை சின்னத்துக்காக தொண்டர்கள் உழைத்து கொண்டே தான் இருப்பார்கள். எனவே, எங்களுக்கு பாதிப்பு வராது.
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என பாஜக தன்னிடம் கூறியதாக செங்கோட்டையன் கூறியிருக்கிறாரே?
சிறு சிறு மனஸ்தாபங்களுடன் பிரிந்து கிடப்பவர்களை, ஒன்று சேருங்கள் என்று தான் பாஜக கூறியதே தவிர, பிரிந்து செல்லுங்கள் என்று சொல்லவில்லையே. தீயசக்தி திமுகவை விரட்டி அடிக்கவேண்டுமென்றால், எப்பாடுபட்டாவது பிரிந்தவர்கள் ஒன்றுசேர வேண்டும். இனிவரும் காலங்களில் பிரிவு என்ற சொல்லே இருக்க கூடாது.
பாஜக கூட்டணியில் கூடுதலாக எந்தக் கட்சி வந்தால் உங்கள் கூட்டணி இன்னும் பலமாக மாறும் என்று நினைக்கிறீர்கள்?
இப்போது இருக்கும் கூட்டணியே நல்ல பலமான கூட்டணி தான். தீயசக்தி திமுகவை விரட்டி அடிக்க, ஊழல் அற்ற ஆட்சியை மக்களுடைய நலனுக்கு கொடுப்பதற்காக, தேசிய ஜனநாயக கூட்டணியில், ஒருமித்த கருத்தோடு, எங்களுடைய சித்தாந்தத்தை ஏற்று யார் வருவதாக இருந்தாலும் எங்களுடைய கூட்டணி கதவு திறந்திருக்கும்.
மகளிர் வாக்குகளைக் கவர பாஜக என்ன திட்டம் வைத்திருக்கிறது?
கிராமபுறம் முதல் நகர்புறம் வரை அனைத்து மகளிரின் வாழ்வாதாரத்தை உயர்த்த பிரதமர் மோடி ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதிமுகவும், பாஜகவும் பெண்களை மேண்மைபடுத்துவதற்காக பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. எனவே, பெண்களுக்காக புதிய
திட்டங்கள் எதுவும் கொண்டு வர வேண்டியதில்லை. ஏற்கெனவே நிறைய திட்டங்கள் இருக்கிறது. அந்த திட்டங்கள் அனைத்தும், இடைத்தரகர்கள் இல்லாமல், பெண்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், திமுக பெண்களுக்காக ஒரு திட்டத்தை கொண்டு வந்து, அந்த திட்டத்தில் பயனடையும் பெண்களை, ‘ஓசி’ உள்ளிட்ட அநாகரீக வார்த்தைகளால் திட்டுகிறார்கள்.
ராகுலின் ஓட்டுத் திருட்டு குற்றச்சாட்டு எந்த அளவுக்கு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்கள்?
எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவருக்கு தான் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜக எந்த ஒரு குற்றச்சாட்டையும் ஆதாரத்துடன் வெளியிடுகிறது. இவர்கள் வாய்வார்த்தைகளால் மட்டுமே குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.
அரசியலில் மகளிரின் பங்களிப்பு போதுமான அளவில் இருக்கிறதா? புதிதாக அரசியலுக்கு வரும் மகளிருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அனைத்து துறைகளிலும் பெண்கள் நாங்கள் வந்துவிட்டோம் என சொல்வதைக் காட்டிலும், இன்னும் எண்ணற்ற துறைகளில் பெண்களை கொண்டு வருவதற்கான சக்தியாக, களமாக இருப்பது அரசியல் தான். கல்வி அறிவு மட்டுமல்ல, திறமை மிக்க பெண்கள் அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். வாக்களிப்பது எப்படி ஒரு ஜனநாயக கடமையோ, அதேபோல், பெண்கள் ஒவ்வொருவரும் அரசியலுக்கு வருவதை ஜனநாயக கடமையாக ஏற்று வர வேண்டும்.
2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வீர்களா?
கண்டிப்பாக எதிர்கொள்வேன். பாஜகவில் எனக்கு கீழ்வைத்தினாங்குப்பம்(கே.வி.குப்பம்) தொகுதியில் பொறுப்பாளராக நியமித்திருக்கிறார்கள். தற்போது, அந்த தொகுதியில் நான் முழு கவனம் செலுத்தி வருகிறேன். அந்த தொகுதியில் மக்கள் பணி செய்ய எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.














