“அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை; பழனிசாமிக்கு வெற்றியே கிடையாது” – திமுகவில் இணைந்த ஓபிஎஸ் கருத்து

0
16

 “அனைவரையும் அரவணைத்து செல்லும் வகையில் கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சர்வாதிகாரமாக நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமியால், எந்த காலத்திலும் இனி வெற்றிபெற முடியாது” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

திமுகவில் இணைந்தபின்னர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், “அண்ணா ஆரம்பித்த தாய்க் கழகமான திமுகவில் மன மகிழ்ச்சியுடன் இணைந்துள்ளேன். அண்ணா, கருணாநிதி காட்டிய வழியில் அனைவரையும் அரவணைத்து செல்லும் வகையில் கட்சியையும், ஆட்சியையும் மு.க.ஸ்டாலின் வழிநடத்தி வருகிறார்.

அரசியலில் சர்வாதிகாரமாக ஆணவப் போக்கோடு நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமி, எந்த காலத்திலும் இனி வெற்றிபெற முடியாது எனும் சூழலை அதிமுகவுக்கு உருவாக்கியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் திமுகவில் இணைந்துள்ளனர்.

ஓர் அரசியல் இயக்கத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற இலக்கணத்தோடு ஸ்டாலின் கட்சியை வழிநடத்துகிறார். முதல்வர் ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகள் மக்களை முழுமையாகச் சென்றடைந்துள்ளது. அடித்தட்டு, ஏழை எளியவர்கள், பெண்கள் மன மகிழ்ச்சியோடு இந்த ஆட்சியில் உள்ளனர். அண்ணா, கருணாநிதி எப்படி அனைத்து கட்சிகளையும் தாயுள்ளத்தோடு சட்டப்பேரவையில் அணுகினாரோ, அதே பாணியில் முதல்வர் ஸ்டாலினும் செயல்படுகிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு தலைமைப் பண்பு இல்லை. தென்மாவட்டங்களின் எந்தவொரு தலைவரும் வளர்ந்துவிடக் கூடாது என எடப்பாடி பழனிசாமி பழனிசாமி நினைக்கிறார். அவ்வாறு அதிமுகவில் தென் மாவட்டங்களில் வளரும் தலைவர்களை பழனிசாமி அழித்து வருகிறார். பழனிசாமியால் அதிமுக அழிவுப்பாதையில் செல்கிறது.

கடந்த காலங்களில் அதிமுகவில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களால் பாதிக்கப்பட்டேன். அனைவரையும் அரவணைக்கும் போக்கு இப்போது அதிமுகவில் இல்லை. அதனால் எந்த அழுத்தமும் இல்லாமல், சுயமாக முடிவெடுத்து திமுகவில் இணைந்துள்ளேன். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின் வாய்ப்புக் கொடுத்தால் போட்டியிடுவேன்.

எனவே, வரும் தேர்தலில் திமுக மீண்டும் வென்று ஆட்சியமைக்கும். கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி, சிறப்பான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். மீண்டும் திமுக ஆட்சியே தமிழகத்தில் அமையும்.

நான் சரியான முடிவை எடுத்துள்ளதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர். திமுக ‘தீய சக்தி’ என்று நான் ஒருபோதும் சொன்னது கிடையாது. அதிமுகவுக்கு இனி எதிர்காலமே இல்லை.” எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here