கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளர் சுதாகர், திமுக வேட்பாளர் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் கீழ் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த 30-ம் தேதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தொடர் விடுமுறைக்குப் பின் 2-வது நாளாக நேற்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலில், கும்மிடிப் பூண்டி தொகுதியில், திமுக வேட்பாளர் டி.ஜெ. கோவிந்தராஜன், அதிமுக வேட்பாளர் சுதாகர், தவெக வேட்பாளர் விஜயகுமார், சுயேச்சை வேட்பாளர் ராமசந்திரரெட்டி உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
திமுக வேட்பாளர் டி.ஜெ. கோவிந்த ராஜன் வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு வெளியே வந்தபோது, அதிமுக வேட்பாளர் சுதாகர் வேட்புமனு தாக்கல் செய்ய அலுவலகம் உள்ளே சென்றார்.
இருவரும் நேருக்கு சந்தித்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில், திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் காலில் சுதாகர் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். இச்சம்பவம், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.














