தேர்தல் பணிகளில் அதிமுக – பாஜக தீவிரம்: பழனிசாமி உடன் பியூஷ் கோயல் சந்திப்பு!

0
13

சென்னையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஷ் கோயலை தமிழக சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளராக பாஜக சமீபத்தில் நியமித்தது. இந்நிலையில், பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாக டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று வந்தார். தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர், சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக தேர்தல் இணை பொறுப்பாளர் அர்ஜுன் ராம் மெக்வால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி முனுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்தச் சந்திப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இன்றைய தினம் சென்னை வருகை தந்த வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இணை பொறுப்பாளர் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் இருவரையும் தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அஇஅதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசியச் செயலாளர் மற்றும் தமிழக பாஜக தேசிய பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக பாஜக தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உடன் இருந்தனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here